முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, January 13, 2023

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் மறுசீரமைப்பு பணிகள்!!

No comments :

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணியை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 

ராமேசுவரம் கோவில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அது போல் பல மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு பல ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால் சராசரியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் ரெயில் மூலமாக வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ரூ.90 கோடி நிதியில் மறு சீரமைப்பு செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணியானது மும்பையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே நிலையத்தை மறுசீரமைக்கும் செய்யும் பணியை தனியார் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமேசுவரம் ரெயில் நிலையம் மதுரை-ராமேசுவரம் ரெயில்வே பிரிவில் உள்ள ஒரு முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் புறநகர் இல்லா ரெயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறது. இந்த ரெயில் நிலையத்தை தினந்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூ.90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் பணி அமர்த்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான பணியிடங்களில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடப் பணி நிறைவு பெற உள்ளது. சிமெண்ட் கலவையை கடத்தும் கன்வெயர் தடம் அமைக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் பணிகளை தொடக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 2 மாடி கட்டிடம் ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு ரெயில் நிலைய கட்டிடம் உருவாகுகிறது. 



ராமேசுவரம் கோவில் கோபுர அமைப்புடன் நவீன கட்டிடக்கலை அம்சத்துடன் ரெயில் நிலைய கட்டிடம் அமைய இருக்கிறது. கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் 2 மாடி கட்டிடம் அமைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் 4 மாடிகள் கட்டும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்து நடைமேடை எண் 1, 2, 3 ஆகியவற்றிற்கு நேரடியாக செல்லும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. 4-வது நடைமேடைக்கு செல்வதற்கு மட்டும் அமையப் போகும் புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும். இருந்தாலும் கிழக்கு பகுதி கட்டிடத்தின் திறந்த வெளி வர்த்தக பயன்பாட்டு மாடி பகுதியில் இருந்து நேரடியாக நடைமேடை எண் 4 மற்றும் புதியதாக அமைய இருக்கும் நடைமேடை எண் 5-க்கும் செல்லும் வசதி அமைய இருக்கிறது.

இந்த கட்டிடத்தில் பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள், 4 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. ரெயில் நிலையத்திற்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளுக்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டிடத்தில் பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரெயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைய உள்ளன. வாகனங்கள் வந்து செல்ல தனிப்பகுதியும், இருபுறமும் தூண்களுடன் பாதசாரிகள் நடந்து செல்ல ராமேசுவரம் கோவில் பிரகார அமைப்பில் நடைபாதை அமைய இருக்கிறது. வாகன காப்பகங்கள் நடைமேடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பகுதியில் குழுவாக சுற்றுலா வரும் பயணிகள் காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. வடக்குப்பகுதியில் அமைய இருக்கும் ஒரு மாடி கட்டிடத்தில் ரெயில்வே நிர்வாக அலுவலகங்கள் அமைய இருக்கின்றன. தற்போதைய நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக இருக்கின்றன. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியுடன் கூடிய காப்பகங்கள், ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறைகளுடன் கூடிய உப ரயில்நிலையை கட்டிடங்கள், ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.