Thursday, January 13, 2022
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி யை பிரதமர் திறந்து வைத்தார்!!
ராமநாதபுரத்தில்
ரூ.345 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்
ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றினார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அருகே பட்டனம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்கா அருகில் 22.6 ஏக்கரில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தொடங்கின. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய இந்த பணிகள் ரூ.345 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தன.
இந்த
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
தொடங்கும் என்றும் அறிவித்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதற்கேற்ப மருத்துவ கல்லூரி
பணிகள் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனை
தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர்
நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று மாலை திறந்து வைத்தார். இதற்கான விழா ராமநாதபுரம்
மருத்துவ கல்லூரி வளாகத்தில் கலையரங்க அறையில் எழில்மிகு விழாவாக நடைபெற்றது.
விழாவில்
காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர
மோடி புதிய மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தார்.
இந்த
விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு குத்துவிளக்கு
ஏற்றினார். விழாவில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
கார்த்திக், நவாஸ்கனி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,
பரமக்குடி முருகேசன், மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர்
மலர்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்
பலர் கலந்துகொண்டனர்.