(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 9, 2022

ராமநாதபுரத்தில் ஜூன் 18 ஆம் தேதி இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் ஜூன் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து கலை, பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்திலுள்ள டிடிவிநாயகர் பள்ளி வளாகத்தில் ஜூன் 18 ஆம் தேதி இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள், மாவட்டக் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறுகின்றன.

 

இப்போட்டிகளில் 17 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம், ஆகிய பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும்.

குழு போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை . தனிநபராக 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்தலாம்.

 


குரலிசைப் போட்டி, நாகசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்ஸஃபோன், கிளாரினெட், தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

 

மேலும், தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளில் சேருவோர் 5 தாளங்களில் வாசிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம்.

 

பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்துவோர் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனம் ஆகியவை அனுமதிக்கப்படும்.

 

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், கலை, பண்பாட்டுத் துறை இணையதளத்தில் தங்களது பெயரை பதிவிடலாம். மேலும் தகவல்களுக்கு 98425 96563 என்ற கைப்பேசி அல்லது 94522 566420 என்ற மதுரையில் உள்ள கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment