முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 23, 2022

உள்ளாட்சி திருவிழா - ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க!!

No comments :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

7 பேரூராட்சி களில் 4-ல் தி.மு.க. வெற்றி பெற்றது.

 

ராமநாதபுரம், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. 7 பேரூராட்சி களில் 4-ல் தி.மு.க. வெற்றி பெற்றது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல் குடி மற்றும் தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன.

 


ராமநாதபுரம் நகராட்சி

இதன்படி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட மொத்தம் 33 வார்டுகளை கொண்ட ராமநாதபுரம் நகராட்சியில் தி.மு.க. 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், பா.ஜ.க. அ.ம.மு.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் ம.ம.க. தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

கீழக்கரை 

கீழக்கரை நகராட்சியில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க., சி.பி.ஐ.எம்., எஸ்.டி.பி.ஐ ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

ராமேசுவரம்

ராமேசுவரம் நகராட்சியில் தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயெட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

 

பரமக்குடி

பரமக்குடி நகராட்சியில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும். ம.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆகமொத்தம் 4 நகராட்சிகளிலும் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று முழு வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

 

 

பேரூராட்சிகளை பொறுத்தவரை 7 பேரூராட்சிகளில் 108 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த தேர்தலில் சாயல்குடி பேரூராட்சியில் 15 பதவிகளில் அனைத்தையும் சுயேட்சை உறுப்பினர்கள் வெற்றி பெற்று தக்க வைத்துள்ளனர். அபிராமம் பேரூராட்சியில் 15 உறுப்பினர் பதவிகளில் 13 இடங்களில் தி.மு.க.வும், அ.தி.மு.க.- 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மண்டபம் பேரூராட்சியில் 18 உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. -12 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேட்சை- 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

 

ஆர்.எஸ்.மங்கலத்தில் 15 உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. 13 இடங்களிலும், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

 

முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.- 5 இடங்களிலும், அ.தி.மு.க.- 2 இடங்களிலும், அ.ம.மு.க. -2 இடங்களிலும், சுயேச்சைகள்- 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கமுதி பேரூராட்சியில் 15 பதவிகளில் சுயேச்சைகள்- 14 இடங்களிலும் பா.ஜ.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 

 

தொண்டி பேரூராட்சியில் 9 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேச்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி 7 பேரூராட்சிகளில் 4-ல் தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 15, 2022

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 37 மாணவர்களுடன் வகுப்புகள் துவங்கியது!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் 37 பேருடன் திங்கள்கிழமை தொடங்கியது.

 

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி நடப்பு ஆண்டுக்கான (2022) மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

 

'நீட்' தேர்வில் வென்றவர்கள் மூலம் தமிழக அரசின் 7.5 இடஒதுக்கீட்டில் 6 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். அகில இந்திய ஒதுக்கீடு இடமான 15 பேரில் 4 பேர் கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்ந்தனர். மாநில அளவிலான இடஒதுக்கீட்டின்படி 27 பேர் வரை சேர்ந்துள்ளனர்.

 


ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 71 பேர் வரை சேர கலந்தாய்வில் விருப்பம் தெரிவித்துள்ளநிலையில், அவர்களில் 37 பேர் நேரடியாக திங்கள்கிழமை தொடங்கிய வகுப்பறைகளுக்கு வந்தனர். அவர்களை கல்லூரி முதன்மையர் எம்.அல்லி மற்றும் துணை முதன்மையர் எஸ்.அன்பரசி மற்றும் கண்காணிப்பாளர் மலர்வண்ணன் ஆகியோர் வரவேற்று சான்றுகளை சரிபார்த்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

உயிரி வேதியில், மயக்கவியல் துறை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பாடங்களை நடத்தினர். தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளிலும் இடம் கிடைத்துள்ளன.

 

விடுதிக் காப்பாளராக மருத்துவர் முகைதீன்பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கான தங்கும் அறைகள் உள்ளிட்டவற்றில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

கல்லூரியில் ஓரிரு வாரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்து வகுப்புகள் முழுமையாக நடைபெறும் என்றும், ஓரிரு நாள்களில் எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கான நடவடிக்கை தொடங்கவுள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.