முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 28, 2021

தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியால் ஆன காகிதத் தட்டுகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

 


உயர்நீதிமன்றம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை நெகிழிப் பொருள்களுக்கான தடையை அமல்படுத்தவும், மீறிச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனாலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தயாரிப்பதை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுகிறது. அவை உரிய அரசு அனுமதியின்றியே செயல்படுகின்றன.

 

ஆகவே சுற்றுச்சூழல் மீது அக்கறையுடைய பொதுமக்கள், தடை செய்த நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து ராமநாதபுரத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் தகவல் தருவோருக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.