முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 11, 2021

குழந்தைகள் திருடப்படுவதைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள்!!

No comments :

குழந்தைகள் திருடப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அரசு மருத்துவமனைகளில் அவற்றை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை 671 இடங்களில் நடைபெற்றது. இதில், மண்டபம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

பின்னர், தேவிப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து ஆய்வு செய்தார். இதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

 


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 707 ஆகும். இதில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 450 பேருக்கு (59.19 சதவீதம்) முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 948 பேருக்கு (18.74 சதவீதம்) இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுமாநில அளவில் சராசரியை விட குறைவாகும். எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடப்படுவதை தடுக்க பிரசவத்துக்கு வரும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இல்லாத இடங்களில் அவற்றைப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.