முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 22, 2021

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளதாக, ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள

ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்,

6 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்,

33 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

 

என மொத்தம் 40 இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

 


அதன்படி, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 22 ஆம் தேதி நிறைவடைகிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை வரையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 21 பேரும் என மொத்தம் 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்நிலையில், பரமக்குடி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியிலும் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா நேரில் சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

 

அப்போது, வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அறைகள், அங்கிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு பெட்டிகளைக் கொண்டுசெல்வதற்கான வழி, வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி, அங்கு மேற்கொள்ளும் பாதுகாப்பு ஆகியன குறித்து, காவல் கண்காணிப்பாளர் இ. கார்த்திக்கிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ஆட்சியர், வாக்கு எண்ணுமிடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி ஏற்றுமதி ஆலோசனை கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி ஏற்றுமதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு விவரம்:

நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 26 ஆம் தேதி வரை வர்த்தகம் மற்றும் வணிக வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோல்டன் ரெசிடென்சியில் ஏற்றுமதி குறித்த கூட்டம் நடைபெறுகிறது.

 


இக்கூட்டத்தில் ராமநாதபுரத்தில் கிடைக்கும் உற்பத்தி சார்ந்த மற்றும் ஏற்றுமதி பொருள்களான கடல் சார்ந்த உணவுப் பொருள்கள், பனை பொருள்கள், குண்டு மிளகாய், தென்னை நார் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வோர் பங்கேற்கின்றனர். அத்துடன், ஏற்றுமதிப் பொருள்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

ஏற்றுமதிக்கான ஆலோசனைகளை, தூத்துக்குடி சுங்கம் மற்றும் கலால் வரித்துறை இணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

 

ஆலோசனைக் கூட்ட கூடுதல் விவரங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மாவட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு விவரம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.