முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 22, 2021

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளதாக, ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள

ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்,

6 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்,

33 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

 

என மொத்தம் 40 இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

 


அதன்படி, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 22 ஆம் தேதி நிறைவடைகிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை வரையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 21 பேரும் என மொத்தம் 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்நிலையில், பரமக்குடி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியிலும் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா நேரில் சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

 

அப்போது, வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அறைகள், அங்கிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு பெட்டிகளைக் கொண்டுசெல்வதற்கான வழி, வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி, அங்கு மேற்கொள்ளும் பாதுகாப்பு ஆகியன குறித்து, காவல் கண்காணிப்பாளர் இ. கார்த்திக்கிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ஆட்சியர், வாக்கு எண்ணுமிடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி ஏற்றுமதி ஆலோசனை கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி ஏற்றுமதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு விவரம்:

நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 26 ஆம் தேதி வரை வர்த்தகம் மற்றும் வணிக வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோல்டன் ரெசிடென்சியில் ஏற்றுமதி குறித்த கூட்டம் நடைபெறுகிறது.

 


இக்கூட்டத்தில் ராமநாதபுரத்தில் கிடைக்கும் உற்பத்தி சார்ந்த மற்றும் ஏற்றுமதி பொருள்களான கடல் சார்ந்த உணவுப் பொருள்கள், பனை பொருள்கள், குண்டு மிளகாய், தென்னை நார் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வோர் பங்கேற்கின்றனர். அத்துடன், ஏற்றுமதிப் பொருள்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

ஏற்றுமதிக்கான ஆலோசனைகளை, தூத்துக்குடி சுங்கம் மற்றும் கலால் வரித்துறை இணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

 

ஆலோசனைக் கூட்ட கூடுதல் விவரங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மாவட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு விவரம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, September 13, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 666 வழக்குகளுக்கு தீர்வு!!

No comments :

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதி மன்றம் நிகழ்ச்சி அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கதிரவன் வர வேற்று பேசினார்.

 


நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் பேசியதாவது:-

 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினுரும் வெற்றி பெற்றதாக கருதப் படுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. இந்த வருடத்தின் 3 வது தேசிய மக்கள் நீதிமன்றம். இந்த தேசிய மக்கள் நீதிமன்ற மானது பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய கோர்ட்டு வளா கத்தில் 7 அமர்வுகளில் நடைபெற்றது. 

 

மொத்தம் ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதில் சமரசம் மூலம் 666 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் தீர்வுத் தொகையாக ரூ.2 கோடியே 38 லட்சத்து 95 ஆயிரத்து 336 அறிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி, மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி  சிட்டிபாபு, வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, September 8, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. 

இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சு. சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி தேசிய மக்கள் (லோக் அதாலத்) நீதிமன்றம் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவுபடி மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.



இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். நீதிமன்றங்களில் 10 அமர்வுகளில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உதவியுடன், சமரசத்துக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 

இதில், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்பப் பிரச்னை, சமரச குற்ற வழக்குகளுக்கும் தீர்வு காணப்படும். 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீதிமன்றங்களில் நீண்டநாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்துகொள்ளக்கூடிய வழக்குகளில் பொதுமக்கள் சமரசம் செய்து வழக்கை முடித்துக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.