Thursday, October 1, 2020
நாளை அக்-2 முதல் சென்னை-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து!!
ராமேஸ்வரம்-
சென்னை இடையே 6 மாதத்திற்கு பின் அக்.,2ல் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து துவங்க
உள்ளது.
மார்ச் 24ல் துவங்கிய ஊரடங்கினால் ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. செப்.,1 முதல் பொது போக்குவரத்து துவங்கியும், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இல்லை.இந்நிலையில் 6 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம், சென்னை இடையே அக்., 2 முதல் 5ம் தேதி வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் அக்.,2 ல் சென்னை எழும்பூரில் மாலை 5:45க்கு புறப்பட்டு விழுப்புரம்,
திருச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அக்.,3 அதிகாலை 4:25க்கு ராமேஸ்வரம்
வந்து சேரும்.
அக்.,3
இரவு 8:25க்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு அக்.,4 காலை 7:15க்கு
சேரும் என தென்னக ரயில்வே தெரிவித்துஉள்ளது. இதனையடுத்து நேற்று பாம்பன் பாலத்தில்
ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி போக்குவரத்தை மாற்றம் செய்ய திட்டம்!!
ராமநாதபுரம்-கீழக்கரை
சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புதிய சாலை மேம்பாலம்
அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த ரூ.5
கோடியே 14 லட்சம், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25 கோடியே 60
லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலமானது, மொத்தம் 720 மீட்டர்
நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது.
தற்போது
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 7 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பணிகள் நடைபெற தொடங்கினால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.இதன்காரணமாக
வாகனங்களை மாற்றுவழியில் திருப்பி விடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு
வருகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட
பகுதிகளுக்கு சென்று திரும்பி வரும் புறநகர் பஸ்களை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை
சாலை வழியாக சென்று தேவிபட்டினம் விலக்கு வழியாக பேராவூர் சாலையில் வந்து புதிய பஸ்நிலையத்தை
அடையும் வகையில் மாற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே
மார்க்கமாக இருவழிகளிலும் சென்றுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர
டவுன் பஸ்கள் சென்றுவருவதற்கு மாற்றுவழி குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை
மேற்கொண்டு வருகிறார்.
நகர்
பஸ்கள் பழைய பஸ் நிலையம், குமரையாகோவில், பாரதிநகர், கலெக்டர் அலுவலகம், பட்டணம்காத்தான்
பகுதிகளுக்கு சென்றுவர வேண்டிய நிலை உள்ளதால் அதற்கேற்ப வழித்தடங்களை மாற்றிஅமைக்க
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேணிக்கரையில் இருந்து செட்டியதெரு, அரண்மனை சாலை வழியாகவும்,
புதிய பஸ் நிலையத்தில் இருந்து சின்னக்கடை சாலை வழியாக குமரையா கோவில் விலக்கு பகுதிக்கு
சென்றுவருவது உள்ளிட்ட பல வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
40
முதல் 50 நாட்களில் மேம்பால தூண்கள் அமைக்கப்படும் என்றும் அதன்பின் மேற்பகுதியில்
மட்டுமே வேலை நடக்கும் என்பதால் கீழே சாலையில் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு
செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.