Monday, September 28, 2020
ராமநாதபுரம் கல்வி அலுவலக அதிகாரி உள்பட 5 பேர் கைது; போலி நியமன சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த வழக்கு!!
தமிழகத்தில்
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குரூப்-4 தேர்வு
மூலம் நிரப்பப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்கு
கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் உள்ள 4 பணியிடங்கள்
காலியாக உள்ளன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில்
காலியாக உள்ள 2 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே
தேர்வாகி பணியில் சேர்ந்துள்ளார். மீதம் உள்ள ஒரு பணியிடம் அந்த பள்ளியில் காலியாக
இருந்தது.
இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் சூரங்கோட்டை வலம்புரி நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜேஷ்
(வயது 32) மேற்கண்ட பணிக்கு தான் தேர்வாகி உள்ளதாக கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
கையெழுத்துடன் கூடிய பணி நியமன ஆணையை கொண்டு வந்து சிக்கல் அரசு மேல்நிலை பள்ளியில்
பணியில் சேர்ந்துள்ளார். அந்த பணிநியமன ஆணை சான்றிதழின் மேல் தலைமை ஆசிரியருக்கு சந்தேகம்
ஏற்பட்டு விசாரித்து பார்த்தபோது அது போலியான உத்தரவு என்பது தெரிந்தது. இதுபற்றி தகவல்
அறிந்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு
கார்த்திக் கிடம் புகார் செய்தார்.
திடுக்கிடும் தகவல்கள்
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை வழக்குப்பதிவு
செய்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி
உள்ளன. இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு பலரிடம் ரூ.5 லட்சம் வீதம் பணம் வாங்கி கொண்டு
போலி நியமன ஆணை வழங்கி உள்ளது தெரிய வந்தது. முதன்மை கல்வி அலுவலக இருக்கை பணி கண்காணிப்பாளராக
பணியாற்றி வந்த ராமநாதபுரம் பெரியார் நகரில் வசித்து வரும் குருந்தலிங்கம் மகன் கண்ணன்
(47) என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்தது.
இவர்கள் மூலம் மேற்கண்ட ராஜேஷ் மற்றும் பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த கலைவானன் (26), பரமக்குடி பாரதிநகர் சாத்தையா மகன் சதீஷ்குமார் (33), மண்டபத்தை சேர்ந்த ராமநாதபுரம் பாரதிநகரில் வசித்து வரும் மனோஜ் ஆகியோர் தலா ரூ.5 லட்சம் கொடுத்து பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். பெரிய அளவில் நடந்துள்ள இந்த மோசடியை தொடர்ந்து போலீசார் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன், பரமக்குடி யூனியன் அலுவலக உதவியாளர் கேசவன், ராஜேஷ், சதீஷ்குமார், கலைவாணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜை போலீசார் தேடிவருகின்றனர்.
ஒப்புகை சான்று
இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது மேற்படி கண்காணிப்பாளர் கண்ணன் எதுவுமே தெரியாததுபோன்று விசாரணைக்கு ஒத்துழைத்து உரிய ஆவணங்களை வழங்கி நல்லவர் போல நடித்துள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இதன்பின்னர் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது கண்ணன் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.
பரபரப்பு
பணியில் சேர்ந்த அனைவரின் பட்டியலையும் பரிசோதித்தபோதுதான் மேற்கண்ட 4 பேரும் மோசடியாக சேர்ந்துள்ளது தெரியவந்தது. போலி பணி நியமன சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததால் சம்பளம் போடுவது, பணியாளர் பதிவேடு தயார் செய்தல், வருகை பதிவேடு உள்ளிட்டவற்றில் சிக்கி கொள்வோம் என்ற அடிப்படை தகவல் அறிந்தும் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் துணிச்சலுடன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதுதான் கல்வித்துறை அலுவலர்கள் மட்டுமல்லாது அனைத்து அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இளநிலை உதவியாளர் பணிநியமனத்திலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: தினத்தந்தி