முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 24, 2020

கீழக்கரையில் குப்பை கிடங்கை அகற்றிவிட்டு பூங்கா; மணல்மேட்டில் புதிய மேல்நிலை தொட்டி!!

No comments :

கீழக்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:-

 

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கிழக்கு தெரு பகுதியில் குப்பை கிடங்கு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குப்பை கிடங்கை அகற்றி பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தேன். 


இதன்படி கீழக்கரையின் நகராட்சி ஆணையாளர் தனலெட்சுமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

அப்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி அப்பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன். மேலும் எனது தொகுதி நிதியில் இருந்து அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மா பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கீழக்கரை வடக்கு தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி; 2 பேர் கைது, 826 மதுபாட்டில்கள் பறிமுதல்!!

No comments :

ராமேசுவரத்திற்கு 2 கார்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

உடனே இன்ஸ்பெக்டர் அழகுராஜ் போலீசாருடன் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நின்று ராமேசுவரம் நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்தார். அப்போது அங்கு வேகமாக வந்த 2 கார்களை இன்ஸ்பெக்டர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் ஒரு கார் வேகமாக ராமேசுவரம் நகருக்குள் சென்றது. மற்றொரு கார் திரும்பி ராமநாதபுரத்துக்கே மின்னல் வேகத்தில் சென்றது.

 

உடனே ராமேசுவரம் நகருக்குள் சென்ற காரை இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள தேவர் சிலை அருகே மடக்கி பிடித்தார். அந்த காரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் 576 மதுபாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த ராமேசுவரம் செம்மடத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். காரில் இறங்கி தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இதனிடையே பிடிபட்ட காருடன் வந்த மற்றொரு கார் ராமநாதபுரம் நோக்கி செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் தங்கச்சிமடம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சன் அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது காரை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்று மோதிவிட்டு கார் வேகமாக சென்று விட்டது.

 

இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தப்பிச்சென்ற காரையும், கடத்தல்காரர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் காரில் தப்பிச்சென்ற பெருங்குளத்தை சேர்ந்த பரமேஷ் (வயது20) என்பவரை போலீசார் பிடித்து கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் காரையும், 250 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.