Monday, August 17, 2020
மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்யவேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்!!
ராமநாதபுரம்
மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் ஏராளமான மீனவ மற்றும் விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியின் அருகில் கடலும் ஆறும் சங்கமிக்ககூடிய ஒரு முக்கியமான பகுதியாக ஆற்றங்கரை
திகழ்ந்து வருகின்றது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் பாரம்பரிய மிக்க மீனவர்கள். ஆற்றங்கரை
முகத்துவாரத்தின் அருகே சுமார் 10,000 அடி ஆழத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணி
தொடங்கி உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இப்பணியை தடுத்து நிறுத்த
வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து
அவர், ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்ட
ஊராட்சி கவுன்சிலர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, தி.மு.க. மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்
ஜீவானந்தம், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் தவுபிக் அலி, ஆற்றங்கரை ஊராட்சி தலைவர் முகமது
அலி ஜின்னா, துணைத் தலைவர் அர்பான் மற்றும் வாலாந்தரவை பூரணவேல், வெள்ளரிஓடை சந்திரசேகர்,
நாகராஜன் ஆகியோர் ஆற்றங்கரை பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்.
அப்போது
நவாஸ்கனி எம்.பி. கூறுகையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா
மாவட்டங்களில் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டம் மிகவும்
வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கப் பட்டு உள்ளது. இதனால் நிலத்தடி
நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் அடியோடு அழியும் அபாயம் உள்ளது. மேலும் மனிதர்கள் வாழ
தகுதியற்ற பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உருவாகக்கூடிய நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை
உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க
வேண்டும்.
10
ஆயிரம் அடிக்கு கீழ் பூமியில் ஆழ்குழாய் தோண்டி நீர் ஆதாரத்தை கெடுக்கக் கூடிய ஒரு
சூழல் உள்ளது. குளிர்ச்சியான பகுதியை நெருப்பு போன்ற கந்தக பூமியாக மாற்றும் இதுபோன்ற
திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை,
தேர்போகி, அத்தியூத்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு
ஏற்படும். மக்கள் போராட்டம் வெடிக்கும். இதை தி.மு.க. சார்பில் கடுமையாக எதிர்த்து
விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை செய்கிறேன். உடனடியாக மறு ஆய்வு
செய்து ஏற்கனவே இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருந்தாலும் அதை பரிசீலனை செய்து
ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி:
தினத்தந்தி