Thursday, August 27, 2020
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிதாக 70 வெண்டிலேட்டர்கள்!!
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.2.10
கோடி மதிப்பில் 70 செயற்கை சுவாச சாதனங்கள் (வெண்டிலேட்டர்கள்) புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் எம். அல்லி புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கடந்த ஏப்ரல் மாதம் வரை 18 செயற்கை
சுவாச சாதனங்களே இருந்தன. தீவிர சிகிச்சைப் பிரிவு, ரத்த சுத்திகரிப்புப் பிரிவு, பிரசவ
சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே இந்த சாதனங்கள்
இருந்தன. அதன்பிறகு கரோனா தொற்று பரவலால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்,
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் செயற்கை சுவாச சாதனங்கள் அமைக்கும்
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் எம். அல்லி புதன்கிழமை
கூறியது:
மருத்துவமனைக்கு
தற்போது புதிதாக 70 செயற்கை சுவாச சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், 15 சிறப்பு சாதனங்களாகும்.
இந்த செயற்கை சுவாச சாதனங்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்கான சுவாச வாயுவை விரைந்து வழங்கி,
சிகிச்சை அளிக்கலாம். சாதாரணமான நோயாளிகளுக்கு மணிக்கு 5 லிட்டர் முதல் 5 லிட்டர் வரையில்
(ஆக்ஸிஜன்) சுவாசக் காற்று தேவைப்படும். கரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு மணிக்கு
15 லிட்டர் முதல் 20 லிட்டர் வரையில் சுவாசக் காற்று தேவைப்படும். இத்தகைய தீவிர கரோனா
நோயாளிகளுக்கு சிறப்பு சாதனங்கள் மூலமே சுவாசம் அளிக்க முடியும் என்பதால், அத்தகைய
சிறப்பு வசதி மிக்க சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை சுவாச கருவிகள் ஒவ்வொன்றும்
தலா ரூ.3 லட்சம் மதிப்புடையவை. அரசு மருத்துவமனையில் தினமும் 500- க்கும் மேற்பட்டோருக்கு
கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
1,580 பேருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments :
Post a Comment