முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 27, 2020

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிதாக 70 வெண்டிலேட்டர்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.2.10 கோடி மதிப்பில் 70 செயற்கை சுவாச சாதனங்கள் (வெண்டிலேட்டர்கள்) புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் எம். அல்லி புதன்கிழமை தெரிவித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கடந்த ஏப்ரல் மாதம் வரை 18 செயற்கை சுவாச சாதனங்களே இருந்தன. தீவிர சிகிச்சைப் பிரிவு, ரத்த சுத்திகரிப்புப் பிரிவு, பிரசவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே இந்த சாதனங்கள் இருந்தன. அதன்பிறகு கரோனா தொற்று பரவலால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் செயற்கை சுவாச சாதனங்கள் அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 


இதுகுறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் எம். அல்லி புதன்கிழமை கூறியது:

 

மருத்துவமனைக்கு தற்போது புதிதாக 70 செயற்கை சுவாச சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், 15 சிறப்பு சாதனங்களாகும். இந்த செயற்கை சுவாச சாதனங்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்கான சுவாச வாயுவை விரைந்து வழங்கி, சிகிச்சை அளிக்கலாம். சாதாரணமான நோயாளிகளுக்கு மணிக்கு 5 லிட்டர் முதல் 5 லிட்டர் வரையில் (ஆக்ஸிஜன்) சுவாசக் காற்று தேவைப்படும். கரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு மணிக்கு 15 லிட்டர் முதல் 20 லிட்டர் வரையில் சுவாசக் காற்று தேவைப்படும். இத்தகைய தீவிர கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சாதனங்கள் மூலமே சுவாசம் அளிக்க முடியும் என்பதால், அத்தகைய சிறப்பு வசதி மிக்க சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை சுவாச கருவிகள் ஒவ்வொன்றும் தலா ரூ.3 லட்சம் மதிப்புடையவை. அரசு மருத்துவமனையில் தினமும் 500- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,580 பேருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு நாளை 28 ஆம் தேதி முதல் மாணவ சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

 

இதுகுறித்து கல்லூரி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

 


அதன்படி, வரும் 29 ஆம் தேதி கணிதம், இயற்பியல் பாடங்களுக்கும், 31 ஆம் தேதி வேதியியல், தாவரவியல் பாடங்களுக்கும், செப்டம்பர் 1 ஆம் தேதி விலங்கியல், கடல்வாழ் உயிரியல் பாடங்களுக்கும், 2 ஆம் தேதி பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும், 3 ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


செப்டம்பர் 4 ஆம் தேதி அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அருகே திருவிழா தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 பேர் மீது வழக்கு!!

No comments :

ராமநாதபுரம் அருகே கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

 

ராமநாதபுரம் அருகே பேராவூரில் முனியய்யா கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 


இதில் ரவிசந்திரன் (48), பிரகதி (26) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து இருதரப்பிலும் அளித்தப் புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, August 24, 2020

கீழக்கரையில் குப்பை கிடங்கை அகற்றிவிட்டு பூங்கா; மணல்மேட்டில் புதிய மேல்நிலை தொட்டி!!

No comments :

கீழக்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:-

 

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கிழக்கு தெரு பகுதியில் குப்பை கிடங்கு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குப்பை கிடங்கை அகற்றி பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தேன். 


இதன்படி கீழக்கரையின் நகராட்சி ஆணையாளர் தனலெட்சுமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

அப்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி அப்பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன். மேலும் எனது தொகுதி நிதியில் இருந்து அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மா பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கீழக்கரை வடக்கு தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி; 2 பேர் கைது, 826 மதுபாட்டில்கள் பறிமுதல்!!

No comments :

ராமேசுவரத்திற்கு 2 கார்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

உடனே இன்ஸ்பெக்டர் அழகுராஜ் போலீசாருடன் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நின்று ராமேசுவரம் நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்தார். அப்போது அங்கு வேகமாக வந்த 2 கார்களை இன்ஸ்பெக்டர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் ஒரு கார் வேகமாக ராமேசுவரம் நகருக்குள் சென்றது. மற்றொரு கார் திரும்பி ராமநாதபுரத்துக்கே மின்னல் வேகத்தில் சென்றது.

 

உடனே ராமேசுவரம் நகருக்குள் சென்ற காரை இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள தேவர் சிலை அருகே மடக்கி பிடித்தார். அந்த காரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் 576 மதுபாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த ராமேசுவரம் செம்மடத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். காரில் இறங்கி தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இதனிடையே பிடிபட்ட காருடன் வந்த மற்றொரு கார் ராமநாதபுரம் நோக்கி செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் தங்கச்சிமடம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சன் அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது காரை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்று மோதிவிட்டு கார் வேகமாக சென்று விட்டது.

 

இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தப்பிச்சென்ற காரையும், கடத்தல்காரர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் காரில் தப்பிச்சென்ற பெருங்குளத்தை சேர்ந்த பரமேஷ் (வயது20) என்பவரை போலீசார் பிடித்து கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் காரையும், 250 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, August 18, 2020

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சேரும் மாணவ, மாணவிகளை மாற்றுச்சான்று இல்லாவிட்டாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்க்கை முடிந்த ஒருவாரத்தில் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை பெற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில் 9 ஆம் வகுப்பில் சேருவோருக்கு மாற்றுச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இணையவழி மாணவர் சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நடப்பாண்டில் இணையதளம் - வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட திறன்மேம்பாட்டு மைய உதவி இயக்குநரும், ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வருமான எம்.ரமேஷ்குமார் திங்கள்கிழமை கூறியதாவது-

 

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி மையங்களும், கீழக்கரை உள்ளிட்ட 4 இடங்களில் தனியார் மையங்களும் உள்ளன.

அரசு மற்றும் தனியார் மையங்களில் அரசு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்காக 970 இடங்கள் உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களும் தொழிற்பயிற்சி மையங்களில் சேரலாம். பட்டம் முடித்தவர்களும் விரும்பிய தொழிற்பயிற்சியை இங்கு பெறும் வசதி உள்ளது.

 

இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஆக.17) தொடங்கி வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக அரசு தொழிற்பயிற்சி மையங்களில் விண்ணப்பம் இணையம் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு அதன் மூலமே கலந்தாய்வும் நடத்தப்படவுள்ளது. கலந்தாய்வின் போதுமாணவ, மாணவியர் விரும்பிய தொழிற்பிரிவை தேர்வு செய்து சேரலாம். தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இணைய வசதி இல்லாத மாணவ, மாணவியர் நேரிலும் வந்து உதவும் பிரிவில் கணினி வழியாக விண்ணப்பத்தை தரவிரக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கலாம். அரசு விலையில்லா பொருள்கள் அனைத்தும் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும் என்றார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தில் (பேட்டரி) இயங்கும் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்தவர்களுக்கு மின்கலத்தில் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன. இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இரண்டு கால்களும் செயலிழந்து, இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கர பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

 

கல்வி பயிலுவோர், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் சுயதொழில் புரிவோரும், இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே பயன்பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 

இதேபோல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வருமானம் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளன.

 

ஆகவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, August 17, 2020

மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்யவேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் ஏராளமான மீனவ மற்றும் விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியின் அருகில் கடலும் ஆறும் சங்கமிக்ககூடிய ஒரு முக்கியமான பகுதியாக ஆற்றங்கரை திகழ்ந்து வருகின்றது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் பாரம்பரிய மிக்க மீனவர்கள். ஆற்றங்கரை முகத்துவாரத்தின் அருகே சுமார் 10,000 அடி ஆழத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

 

 

இதனைத்தொடர்ந்து அவர், ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, தி.மு.க. மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் தவுபிக் அலி, ஆற்றங்கரை ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா, துணைத் தலைவர் அர்பான் மற்றும் வாலாந்தரவை பூரணவேல், வெள்ளரிஓடை சந்திரசேகர், நாகராஜன் ஆகியோர் ஆற்றங்கரை பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

அப்போது நவாஸ்கனி எம்.பி. கூறுகையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டம் மிகவும் வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கப் பட்டு உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் அடியோடு அழியும் அபாயம் உள்ளது. மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உருவாகக்கூடிய நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

 

10 ஆயிரம் அடிக்கு கீழ் பூமியில் ஆழ்குழாய் தோண்டி நீர் ஆதாரத்தை கெடுக்கக் கூடிய ஒரு சூழல் உள்ளது. குளிர்ச்சியான பகுதியை நெருப்பு போன்ற கந்தக பூமியாக மாற்றும் இதுபோன்ற திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி, அத்தியூத்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும். மக்கள் போராட்டம் வெடிக்கும். இதை தி.மு.க. சார்பில் கடுமையாக எதிர்த்து விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை செய்கிறேன். உடனடியாக மறு ஆய்வு செய்து ஏற்கனவே இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருந்தாலும் அதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, August 11, 2020

கீழக்கரையில் Energy Hub Engineering அலுவலகம் திறப்பு விழா!!

No comments :


07-08-2020 அன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள அனஸ் காம்ப்ளக்சில் Energy Hub Engineering திறப்பு விழா நடைபெற்றது.

 

ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி செயலாளர் முஹைதீன் ஃபாருக் தலைமையில் கீழக்கரை டவுன் காஜி மௌலவி டாக்டர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி திறந்து வைத்தார்.

 



திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜும்ஆ பள்ளி இமாம்கள் மௌலவி முஹம்மது பஷீர் ஆலிம், மௌலவி செய்யது முஸ்தபா ஆலிம், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அரபுத் துறை பேராசிரியர் மௌலவி செய்யது அஹ்மது நெய்னா ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிறுவனத்தின் இயக்குநராக பொறியாளர் ஹுசைன் அல்லாஹ் பக்ஸ் உள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, August 10, 2020

குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டம் சாதனை நிகழ்வாக அங்கீகரிப்பு - கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1000 குறுங்காடுகள் வளர்ச்சி திட்டப் பணிகளை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய நிறுவனங்களின் மூலம் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து கலெக்டர் வீரராகவராவிற்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் பேசியதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமையான சூழலை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 1000 குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பசுமை போர்வையினை அதிகப்படுத்தவும் நடவு செய்யப்படும் செடிகளின் உயிர்ப்பு விகிதத்தினை அதிகப்படுத்திடவும் குறுங்காடுகள் வளர்ப்பு முறையில் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. குறிப்பாக, பாரம்பரிய வகைகளான நாட்டுப்பூவரசு, நாட்டு வாகை, புங்கன், ஆவி போன்ற மரக்கன்றுகளும், வேம்பு, புளி, நாவல், கொய்யா, மாதுளை, சீத்தா, நெல்லி போன்ற பழம் தரும் மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட மரக்கன்றுகள் 1 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த குறுங்காடுகள் வளர்ப்பு பணியானது மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் பயன்பாடற்ற தரிசுநிலங்கள், குப்பை, கழிவுகள் தேங்கிய இடங்கள், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த இடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அப்பகுதிகளை முறையே சுத்தம் செய்து பசுமையான குறுங்காடுகளாக ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக 500 ச.மீ அளவுள்ள நிலப்பரப்பு 4 மீ அகலத்தில் தெரிவு செய்யப்பட்டு 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. குறுங்காடுகள் வளர்ப்பு பணியின் மூலம் மாவட்டத்தில் இதுவரை 58 ஏக்கர் பரப்பளவு கருவேல மரங்கள் நிறைந்த நிலங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டும், 12 ஏக்கர் அளவுள்ள குப்பை மேடுகள், கழிவு நீர் தேங்கிய பகுதிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டும், குறுங்காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பசுமையான சூழல் மேம்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

 

தற்போது மாவட்டத்தில் 1000 குறுங்காடுகள் அமைக்கப்பட்டு 5,41,050 மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இத்திட்டப் பணிகளை சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு சான்றிதழ் வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள 1000 குறுங்காடுகள் வளர்ப்பு திட்டப் பணிகளை உலக சாதனை நிகழ்வுகளை அங்கீகரிக்கும் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் ஏஸியா பசிபிக் அம்பாஸிடர் கார்த்திகேயன் ஜவஹர், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடிகேட்டர் சிவக்குமரன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் அஸோசியேட் எடிட்டர் ஜெகந்நாதன், சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் பாலாஜி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் கள ஆய்வு அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குறிப்பிட்டுள்ள 4 நிறுவனங்களின் மூலம் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டப் பணிகளை சாதனை நிகழ்வாக அங்கீகரித்து அங்கீகாரம் வழங்கப்பட்டது. இத்திட்டப்பணியில் ஈடுபட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார், ராமநாதபுரம் சப்- கலெக்டர் சுகபுத்ரா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரகணபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.