(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 1, 2020

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 27 நாள்களில் 45 பேர் உயிரிழப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 27 நாள்களில் 45 பேர் உயிரிழந்தது குறித்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினரின் விசாரணைக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையானது சமீபத்தில்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மருத்துவக் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த மருத்துவமனை நிர்வாகம், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான முதன்மையர் பொறுப்பில் நிர்வகிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கரோனா பரவல் தடுப்பு பொது முடக்கம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை . ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவானது 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தது.


இந்த நிலையில், கடந்த மே 1 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு வந்தவர்களில் 28 ஆண்கள், 12 பெண்கள், 2 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 45 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததாலும், கரோனா தொற்று பரிசோதனைக்கு காட்டிய கவனத்தை பிற நோயாளிகளிடம் மருத்துவர்கள் காட்டாததாலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் தற்கொலை, விபத்து ஆகியவற்றில் உயிரிழந்தவர்கள் பலர் உள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதுகுறித்து மருத்துவமனையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: மே மாதத்தில் 45 பேர் உயிரிழந்தது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment