முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 3, 2019

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதியின்மை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிக்கின்றனர்.


ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் 800க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர். உள் நோயாளிகளுக்கு உதவியாளர்களாக உறவினர்கள் உடன் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.


இதனை முறையாக பாராமரிக்காததால் பழுதடைந்து செயல்படாமல்உள்ளது. குடிநீருக்காக மக்கள் தினமும் வெளியில் உள்ள கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். வேறு வழியின்றி ஏழை மக்கள் பணம் கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் வீரராகவ ராவ் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மூடப்பட்ட கட்டண கழிப்பறை:

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும்வெளி நோயாளிகள், உள் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், நோயாளிகளை பார்க்க வருவோர் பயன்படுத்துவதற்காக மருத்துவமனை வளாகத்தில் நவீன கட்டண கழிப்பறை செயல்பட்டு வந்தது. இது கடந்த ஆறு மாதங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் அவசரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதில் பெண்களின் நிலை பரிதாபம்.


இயங்காத பேட்டரி கார்:


முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா தொகுதி வளர்ச்சி திட்ட நிதியில் பேட்டரி கார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நடக்க முடியாமல் வரும் நோயாளிகளை அவர்களுக்கு உரிய வார்டுகளின் வாசல் வரை இதில் கொண்டு விட்டனர். இந்த பேட்டரி காரும் பல மாதங்களாக பழுதாகி பயன்பாடில்லாத நிலையில் உள்ளது. இதனால் வயதான, நடக்க முடியாத நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் இது போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினமலர்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ஏர்வாடி சந்தனக்கூடு விழா, கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது!!

No comments :
ஏர்வாடியில் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவின் 845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு துவங்கியது. ஜூலை 13 (சனி) அடிமரம் ஊன்றப்பட்டும், ஜூலை 14 மறுநாள் (ஞாயிறு) மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

மதநல்லிணக்க சந்தனக்கூடு கடந்த ஜூலை 26 (வெள்ளி) மாலை மவுலீதுடன் துவங்கி மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை நடந்தது. ஜூலை 27 அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது. பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். 


நேற்று மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது. பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் கொடி வைக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். 

கொடியிறக்கத்திற்கு பின் இரவு 7:00 மணிக்கு நெய்சோறு வழங்கப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ராமநாதபுரம் நகரில் போலி பீடி விற்பனை; 2 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் நகரில் போலீசார் சோதனையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் 28போலி பீடி பண்டல்களை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.



ராமநாதபுரம் நகரில் பிரபல பீடி நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி பீடிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகியான ஓம்சக்தி நகரை சேர்ந்த அப்துல் நஜீத் போலீஸ்உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள கடையில் போலி பீடி கட்டுகள் இருப்பதாக புகார் அளித்தவரின் தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப்போது 20 போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஞானசேகரன் 42, என்பவரைபோலீசார் கைது செய்தனர். இதே போல் ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியில் உள்ள கடையிலும் 8 போலி பீடி பண்டல்களை கைப்பற்றி கடை உரிமையாளர் அப்துல் பாசித் 38, என்பவரை கைது செய்தனர். 

இந்த போலி பீடி பண்டல்களை ராமநாதபுரத்திற்கு வந்த கேரளாவை சேர்ந்தவரிடம் இருந்து வாங்கியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். அதனடிப்படையில் போலீசார் போலி பீடியை ராமநாதபுரத்தில் விற்பனை செய்யும் கேரள நபர்களை பிடிக்க விசாரணையை துவக்கியுள்ளனர்.

செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;