முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 2, 2019

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை; மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியம்!!

No comments :
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழகத்தில் முழுமையாக நேற்று முதல் அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றுப்பொருட்கள் உற்பத்திக்கு அரசு திட்டமிடாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக ஒழிப்பது சாத்தியம். அதற்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும், மண்ணை மலடாக்கும், நீர் பிடிப்பு பாதிப்பு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவ காரணமாகியது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் உணவுப்பொருட்கள் பேக்கிங், மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள பொருட்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டது.

மண்குவளைகள், பாக்குமட்டை தட்டுகள், துணிப்பைகள், சணலால் ஆன பைகள், ஓலைகளால் உருவாக்கப்படும் பெட்டிகள். மரங்களில் தயாரிக்கப்படும் சமையல் துடுப்பு, தயிர் மத்து, கரண்டிகள், கைப்பைகள், துணியால் ஆன மேஜை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தப்படுகின்றன. 

மக்களிடம் நீக்கமற நிறைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது என்பதால் தான், அரசு 6 மாதங்களுக்கு முன்பாக தடை அறிவித்தது. மாற்றுப்பொருட்கள் உற்பத்தியோ போதுமான அளவில் இல்லை. மக்கள் மாற்றுப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 



மக்கள் கேரி பேக்குக்கு பதிலாக துணிப்பபைக்கு மாறி வருகின்றனர். கடைகளில் துணிப்பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் தரப்பில் துணிப்பையிலும் கலர் பைகள் விற்பனை செய்யக்கூடாது. கலர் சேர்க்கும் போது, அதில் உள்ள வேதிப்பொருட்களால் பாதிப்பு ஏற்படும் என்று அதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சில வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக கேரி பேக்குகள், டம்ளர்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகள் முழுமையாக மாற்றம் பெறவில்லை என்பதே உண்மை. 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது குறித்தும், மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் மாற்றுப்பொருட்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 


அரசு எத்தனை தடை விதித்தாலும், அதனை பயன்படுத்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தின் மூலம் தான் முழுமையான தடையை அமல்படுத்த முடியும். மக்கள் பயன்பாடு குறைந்து மாற்றுப்பொருட்களுக்கு மாற வேண்டும். மாற்றத்தில் இருந்து தான் ஏற்றம் காண முடியும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பெற்றோர்களே உஷார், கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள்!!

No comments :

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. மறைமுகமாக விற்பனை செய்து வந்த நிலையில் சமீப காலமாக சர்வ சாதாரணமாக பொதுஇடங்களில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீஸ் நிர்வாகம் பல முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளதே இந்த சர்வ சாதாரண விற்பனையின் சாட்சியாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சக்கரக்கோட்டை பகுதியில் 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிவதை கண்டனர். அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் பையுடன் திரிவதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்து சோதனையிட்டனர்.



இந்த சோதனையில் அந்த மாணவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த மாணவர்களை தனியாக அழைத்து வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில் கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மாணவர்களிடம் பணத்தாசை காட்டி இதுபோன்ற சட்டவிரோத செயலுக்கு சமூக விரோதிகள் ஈடுபடுத்தியிருப்பது தெரிய வந்தது.

ஒரு மாணவருக்கு 20 பொட்டலங்கள் வீதம் கொடுத்தனுப்பி அதனை ரூ.200 வீதம் விற்பனை செய்து வந்து கொடுத்தால் ரூ.200 கொடுப்பார்களாம். இந்த பணத்தினை வைத்து மாணவர்கள் ஜாலியாக சுற்றி பொழுதை கழித்து வந்துள்ளனர். அரையாண்டு தேர்வு மட்டுமல்லாது பள்ளி நாட்களிலும் மாலை நேரங்களில் இதுபோன்று பல மாணவர்களை வியாபாரிகள் தங்களின் கஞ்சாவிற்பனைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் என்றால் சந்தேகம் வராது என்பதாலும், அவர்களை கைது செய்ய முடியாது என்பதாலும் கஞ்சா விற்பனையாளர்களுக்கு வசதியாக போய்விட்டது.

இதனை எதிர்பார்க்காத போலீசார், சிறுவர்களிடம் கஞ்சா விற்பனைக்காக கொடுத்த நபர் குறித்து விசாரித்தனர். மேலும் கஞ்சா பொட்டலம் காலியாகி விட்டதால் மீண்டும் தருமாறு சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்க வைத்தனர். அப்போது கஞ்சா பொட்டலங்களுடன் மொத்த வியாபாரி வராமல் அவரிடம் வேலை பார்க்கும் ராமநாதபுரம் அண்ணாநகர் முத்து(வயது35) என்பவர் வந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் கஞ்சா மொத்த வியாபாரியான ஓம்சக்திநகர் சுரேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர் உஷார் இதில் போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் உஷாராக இருந்து தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டியதும் அவசியமாகும்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் ரெயில் பாலம் பழுது; ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்!!

No comments :

பாம்பன் ரெயில் பாலம் பழுதாகி ராமேசுவரம் செல்லும் ரெயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, ரூ.250 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதால், அந்த பாதையில் ரெயில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்தநிலையில், நாளை(வியாழக்கிழமை) முதல் வருகிற 5–ந் தேதி வரை மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் இரு மார்க்கங்களிலும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மதுரை–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56723, 56722, 56725, 56724, 56721, 56726) ஆகிய பாசஞ்சர் ரெயில்கள் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
ராமேசுவரம்–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22621) நாளை ஒரு நாள் மட்டும் மதுரை–ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22621/22622) வருகிற 5–ந் தேதி இருமார்க்கங்களிலும் மதுரை–ராமேசுவரம் வரை ரத்து செய்யப்படுகிறது.



ராமேசுவரம்–திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16779/16780) வருகிற 5–ந் தேதி மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.
திருச்சி–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56829/56830) இரு மார்க்கங்களிலும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.
அதேபோல, தண்டவாள பராமரிப்பு பணிக்காக மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56734/56735) நாளை(வியாழக்கிழமை) மற்றும் 5–ந் தேதி ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களிலும் விருதுநகர் ரெயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மதுரை–பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56709/56710) நாளை, 4–ந் தேதி, 5–ந் தேதிகளில் இருமார்க்கங்களிலும் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)