(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 20, 2019

பாம்பன் கடலில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம்!!

No comments :
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கி விட்டது. புதிய ரெயில் பாலமானது குஜராத்தில் உள்ள தனியார் கன்சல்டன்சி நிறுவனமே செய்ய உள்ளது. புதிய ரெயில் பாலத்திற்காக கடலில் துளை போடும் எந்திரம் உள்ளிட்ட பல வகையான உபகரணங்கள் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி மற்றும் மண்டபம் ரெயில் நிலையம் அருகில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள இடத்தினை ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். நிதித்துறை தலைமை அதிகாரி ஆர்.கே.சவுத்ரி, ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட அதிகாரி பி.கே.ரெட்டி, துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய ரெயில் பாலம் மற்றும் தூக்குப் பாலத்தின் மாதிரி வரைபடங்களை பார்வையிட்ட அவர்கள் பாலத்திற்கான முழு விவரங்களையும் கேட்டறிந்தனர்.

பின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.

தூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.

புதிய ரெயில் பாலம் முழுமையாக உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment