Sunday, August 4, 2019
ஜோரான விற்பனையில் போதை மிட்டாய்; பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி!!
ராமநாதபுர மாவட்ட பரமக்குடியில்
அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பான்பராக்,
குட்கா, புகையிலை ஆகியவை பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை பதுக்கி வைத்து விற்கின்றனர்.
அதை வாங்க வருபவர்கள் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் நேரடியாக அதனை கேட்காமல்
ரகசிய வார்த்தைகள் மூலம் சொல்லி அந்த போதை பாக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர். இதை
மிஞ்சும் வகையில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பரமக்குடியில் வைகை ஆறு, எமனேசுவரம், காக்காதோப்பு, வேந்தோணி ரெயில்வே கேட் உள்பட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை வாங்கி பயன்படுத்துபவர்கள் போதை ஏறியதும் சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வதும், பெண்களை கேலி செய்வதும், பொது இடங்களில் நிர்வாணத்துடன் படுத்துக்கிடப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினரும் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது பரமக்குடி பகுதியில் விற்பனையாகி வரும் போதை மிட்டாய் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சிறிய அளவு கஞ்சாவை வைத்து அதன் மேல் மிட்டாய் போல் உருண்டையாக வடிவமைத்து ஒரு மிட்டாய் ரூ.10 என பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைக்கும்பல் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களும் அதை வெறும் மிட்டாய் என நினைத்து வாங்கி சாப்பிடுகின்றனராம். சிறிது நேரம் சென்றதும் அவர்களுக்கு போதை ஏறி ஒழுங்கினச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தினமும் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் தங்களது நண்பர்களுக்கும் அதை வாங்கிக்கொடுத்து பழக்கி விடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் பள்ளிகளில் பரவி வருகிறது. சில மாணவர்கள் மாலையிலும் இதை பயன்படுத்தி வருவதால் வீடுகளில் மயங்கி கிடக்கின்றனராம். பெற்றோர்கள் அலறியடித்து என்ன செய்வது என புரியாமல் அவர்களுடன் மன்றாடி விசாரித்தால் மிட்டாய் விவரத்தை கூறுகின்றனராம்.
இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என்ற அச்சத்தில் யாரிடமும் சொல்லாமல் படிக்கும் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் விவரத்தை கூறி பெற்றோர்கள் புலம்புகின்றனராம். இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களையும், வெளியூர்களில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு வருபவர்களையும் குறிவைத்து தான் அந்த போதை மிட்டாய் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் மாணவ சமுதாயத்தின் நிலை மோசமாகி விடும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும், புலம்புகின்றனர். எனவே மாவட்ட காவல்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
No comments :
Post a Comment