(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 25, 2019

ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதி திரு.நவாஸ்கனி!!

No comments :
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிட்டார்.

இதேபோல பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. சார்பில் வது.ந.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேசுவரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் விஜயபாஸ்கர் உள்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 10 லட்சத்து 60 ஆயிரத்து 802 வாக்குகள் பதிவாகின. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனால் உற்சாகமடைந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதியின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 1 மணி வரை நடந்தது. தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 1 லட்சத்து 27 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் வழங்கினார். இதையடுத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், கோ‌ஷங்களை எழுப்பியும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கடந்த 1967–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எம்.சரீப் தராசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment