Saturday, March 23, 2019
ராமநாதபுரம் எம்.பி வீட்டில் சிபிஐ விசாரணை!!
மதுரை வஃக்பு வாரியக் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில்
முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அடிப்படையில் ராமநாதபுரம்
எம்.பி. ஏ.அன்வர்ராஜாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை
விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரத்தில் உள்ள ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்
ஏ. அன்வர்ராஜா. இவர் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு
வஃக்பு வாரியத் தலைவராகவும் உள்ளார்.
மதுரையில் உள்ள வஃக்பு வாரியக் கல்லூரியில் பணியாளர்கள்
நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை
தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுரை சிபிஐ பிரிவைச்
சேர்ந்த அதிகாரி கார்த்திகைசாமி, ஆய்வாளர் வேலாயுதம் ஆகியோர் கொண்ட 7 பேர்
குழு அன்வர்ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில்
இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் அவரிடம் கையெழுத்து பெற்றதாகவும் சிபிஐ
தரப்பில் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் மக்களவை உறுப்பினர் வீட்டில் சிபிஐ
அதிகாரிகள் விசாரணை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது
மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு
அன்வர்ராஜா கட்சி மேலிடத்தை வலியுறுத்திய நிலையில், கூட்டணிக் கட்சியான
பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment