Tuesday, March 12, 2019
தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் ‘சுவிதா’ செயலி அறிமுக விளக்க கூட்டம்!!
இந்திய தேர்தல் ஆணையத்தின்
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக
கூட்ட அரங்கில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்ற
வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு குழு கூட்டம் மாவட்ட
தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான
வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள்
அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் என அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முறையே கடைபிடிப்பது
அவசியமாகும். குறிப்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தாங்கள்
மேற்கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பயன்படுத்தும் வாகனங்கள், ஒலிபெருக்கிகள், தற்காலிக தேர்தல் அலுவலகங்கள், ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் இறங்குதளம் உட்பட அனைத்து
விதமான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலரின் முன் அனுமதி பெற
வேண்டும்.
மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது
வழிபாட்டுக்குரிய பிற இடங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.
தேர்தல் பிரசாரத்தின் போது சாதி, சமய, மொழி அல்லது வகுப்பினரிடையே
வேறுபாடுகளை தூண்டுகிற விதமாகவோ, பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிற விதமாகவோ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது.
மேலும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள்
இரவு 10 மணி
முதல் காலை 6 மணி வரை
வீடு வீடாக நேரிடையாகவோ, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-ஆப் செயலி உள்ளிட்ட குறுஞ்செய்தி
மூலமாகவோ, தொலைபேசி
அழைப்பு மூலமாகவோ என எந்தவிதத்திலும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. மீறினால்
தேர்தல் நன்னடத்தை விதிமீறலாக கருதப்பட்டு சட்டப்படி முதல் தகவலறிக்கை பதிவு
செய்யப்படும்.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள்
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சிரமமின்றி முன்அனுமதி பெற ஏதுவாகவும், தேர்தல் நடவடிக்கைகளில்
வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையிலும் சுவிதா என்ற செயலி நடைமுறை
படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இந்த செயலி மூலமாக
மட்டுமே முன்அனுமதி பெற முடியும். அதன்படி இந்த செயலி மூலம் முன்அனுமதி கோரி
பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது ஒற்றைச்சாளர முறையில்
உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல வாக்காளர்களை கவரும் விதமாக பணமாகவோ, பொருளாகவோ பரிசுப்பொருட்கள் வழங்குதல்
கூடாது. மீறினால் வாக்கிற்காக பணம் கொடுப்போர் மற்றும் பெறுவோர் என இருதரப்பினர்
மீதும் குற்றவியல் தடுப்பு நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் எந்தவொரு வேட்பாளரையோ அல்லது வாக்காளரையோ சுதந்திரமாக வாக்களிக்க விடாமல்
மிரட்டி அடக்கு முறைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது
குற்றவியல் தடுப்பு நடைமுறை சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுதவிர சுவரொட்டிகள், சுவர்
விளம்பரங்களை பொறுத்தவரையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல்
அறிவிக்கப்பட்ட 24 மணி
நேரத்திற்குள் அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள அரசு நலத்திட்டங்கள் தொடர்பான
அறிவிப்புகள், சின்னங்கள்
ஆகியவற்றை மறைக்கவும், பஸ்
நிலையங்கள், ரெயில்
நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றை 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் இடங்களில் உள்ள அரசியல்
கட்சி விளம்பரங்கள், சின்னங்கள்
ஆகியவற்றை 72 மணி
நேரத்திற்குள்ளும் அகற்ற கால நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல்
ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதனை முறையே
பின்பற்ற வேண்டும்.
மேலும் எந்தவொரு அரசு கட்டிடத்திலும், நகரப்பகுதிகளிலும் சுவர்
விளம்பரம் செய்வதற்கு 100 சதவீதம்
அனுமதி கிடையாது. ஊரகப்பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில் சம்பந்தப்பட்ட
உரிமையாளரின் அனுமதியோடு முறையே தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்அனுமதி பெற்று
விளம்பரம் மேற்கொள்ளலாம். அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தாங்கள்
பயன்படுத்தும் பிரசார பொருட்களில் தமிழ்நாடு அரசு தடை விதித்து அறிவித்துள்ள
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க
வேண்டும்.
அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள மாதிரி நன்னடத்தை
விதிமுறைகளை முறையே பின்பற்றி மக்களவை தேர்தல்-2019 பணிகளை சுமுகமான முறையில் நடத்த
அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு
அவர் கூறினார். கூட்டத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் உள்பட
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment