(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 14, 2019

பாதாளச் சாக்கடை குடிநீர் இணைப்புக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் திட்டம்!!

No comments :
பாதாளச் சாக்கடை குடிநீர் இணைப்புக்கு தவணை முறையில் 5 ஆண்டுகளில் கட்டணம் செலுத்தும் புதிய திட்டம் ராமநாதபுரம் நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பி.குமரகுரு புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ராமநாதபுரம் நகரில் வரி செலுத்தும் கட்டடங்கள் 23,918 உள்ளன. இதில் சுமார் 11 ஆயிரம் கட்டடங்கள் பாதாளச் சாக்கடை இணைப்புப் பெறும் வகையில் உள்ளன. அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 10,258 பாதாளச் சாக்கடை இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் புதிதாக 500 பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்துவிட்டால், கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களிலும் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றதாகிவிடும். 


இந்த நிலையில், தமிழக அரசின் புதிய திட்டமாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடைத் திட்ட இணைப்பைப் பெறுவோர் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு நகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மூலம் சாக்கடை இணைப்பு தரப்பட்டுவிடும். அதன்பின்னர் இணைப்புப் பெற்றவர்கள் சொத்துவரியிலோ அல்லது 5 ஆண்டுகளில் 10 தவணை | முறையிலோ கட்டணத்தை செலுத்தலாம். பாதாள சாக்கடை இணைப்புக்கு அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் செலவாகும். அதை முதலிலே செலுத்த வேண்டிய தேவையில்லை, குடிநீர் குழாய் இணைப்புக்கும் முதலில் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும். பின்னர் தவணை முறையில் அதற்கான கட்டணத்தை செலுத்தலாம், இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும். 

நகரில் தற்போது 147 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அதில் தூர்ந்துபோன 20 கிணறுகளை ரூ.3 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே உள்ள வட்டக்கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கும் வசதிக்காக ரூ.7 லட்சம் செலவிடப்படவுள்ளது. அதன்படி புதிய வட்டக்கிணறானது சிதம்பரம் பிள்ளை ஊருணியில் அமைக்கப்படுகிறது. 

நகராட்சி விதிமுறைப்படி தினமும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் தரப்படவேண்டும். ஆனால், தற்போது 61 லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தொட்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment