Thursday, February 7, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் 196 கிலோ கஞ்சா பறிமுதல், முன்னாள் தாசில்தார் கைது!!
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து
இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து உச்சிப்புளி
போலீசார் நேற்று அரியமான் கடற்கரை பகுதியில் உள்ள தோட்டங்களில் அதிரடி சோதனை
நடத்தினர்.
அரியமான் கடற்கரைக்கு செல்லும் வழியில் ஒரு மாந்தோப்பில்
உள்ள கட்டிடத்தில் சாக்குமூடைகள் இருந்தன. அதனை போலீசார் சோதனையிட்டபோது அதில்
பண்டல், பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை
பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
மொத்தம் 196 கிலோ கஞ்சா அங்கு சிக்கியது. இதன் மதிப்பு ரூ.20
லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இதையடுத்து காவலாளியாக இருந்த ஓடைத்தோப்பு கிராமத்தை
சேர்ந்த முத்து இருளாண்டி(வயது 26) என்பவரை பிடித்து
போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், அந்த மூடைகளை 2
பேர் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றதாகவும், இதுபற்றி தோப்பின் உரிமையாளர் காரான் சேதுநகரை சேர்ந்த ஜெயக்குமார்(61)
என்பவருக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் கூறினார். இதை தொடர்ந்து
தோப்பு உரிமையாளரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான
ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தஞ்சை
மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த குமரப்பனும், அவரது
நண்பரும் இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாகவும், அவற்றை தலா 2 கிலோ வீதம் பொட்டலங்களாக தயார் செய்து,
அதனை மாந்தோப்பில் பதுக்கி வைத்துச்சென்றதாகவும் கூறினார்.
இதையடுத்து ஜெயக்குமாரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரையும், பறிமுதல்
செய்யப்பட்ட கஞ்சாவையும் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம்
ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் தாசில்தார் ஜெயக்குமாரிடம் தொடர்ந்து
தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கஞ்சா கடத்தலில் தொடர்புடைய பட்டுக்கோட்டையை
சேர்ந்த குமரப்பன் மற்றும் அவரது நண்பரை கைது செய்வதற்காக போலீசார்
விரைந்துள்ளனர்.
உச்சிப்புளி அருகே நேற்று முன்தினம் இலங்கை அகதி கார்த்திக்
என்பவரிடம் 10 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கியூ பிரிவு
போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். இவருக்கும், ஜெயக்குமாருக்கும்
தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment