(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 2, 2019

பெற்றோர்களே உஷார், கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள்!!

No comments :

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. மறைமுகமாக விற்பனை செய்து வந்த நிலையில் சமீப காலமாக சர்வ சாதாரணமாக பொதுஇடங்களில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீஸ் நிர்வாகம் பல முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளதே இந்த சர்வ சாதாரண விற்பனையின் சாட்சியாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சக்கரக்கோட்டை பகுதியில் 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிவதை கண்டனர். அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் பையுடன் திரிவதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்து சோதனையிட்டனர்.



இந்த சோதனையில் அந்த மாணவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த மாணவர்களை தனியாக அழைத்து வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில் கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மாணவர்களிடம் பணத்தாசை காட்டி இதுபோன்ற சட்டவிரோத செயலுக்கு சமூக விரோதிகள் ஈடுபடுத்தியிருப்பது தெரிய வந்தது.

ஒரு மாணவருக்கு 20 பொட்டலங்கள் வீதம் கொடுத்தனுப்பி அதனை ரூ.200 வீதம் விற்பனை செய்து வந்து கொடுத்தால் ரூ.200 கொடுப்பார்களாம். இந்த பணத்தினை வைத்து மாணவர்கள் ஜாலியாக சுற்றி பொழுதை கழித்து வந்துள்ளனர். அரையாண்டு தேர்வு மட்டுமல்லாது பள்ளி நாட்களிலும் மாலை நேரங்களில் இதுபோன்று பல மாணவர்களை வியாபாரிகள் தங்களின் கஞ்சாவிற்பனைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் என்றால் சந்தேகம் வராது என்பதாலும், அவர்களை கைது செய்ய முடியாது என்பதாலும் கஞ்சா விற்பனையாளர்களுக்கு வசதியாக போய்விட்டது.

இதனை எதிர்பார்க்காத போலீசார், சிறுவர்களிடம் கஞ்சா விற்பனைக்காக கொடுத்த நபர் குறித்து விசாரித்தனர். மேலும் கஞ்சா பொட்டலம் காலியாகி விட்டதால் மீண்டும் தருமாறு சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்க வைத்தனர். அப்போது கஞ்சா பொட்டலங்களுடன் மொத்த வியாபாரி வராமல் அவரிடம் வேலை பார்க்கும் ராமநாதபுரம் அண்ணாநகர் முத்து(வயது35) என்பவர் வந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் கஞ்சா மொத்த வியாபாரியான ஓம்சக்திநகர் சுரேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர் உஷார் இதில் போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் உஷாராக இருந்து தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டியதும் அவசியமாகும்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment