முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 11, 2018

பாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 104 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த 4–ந் தேதி அன்று சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும் தூக்குப் பாலத்தை முழுமையாக பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இந்தநிலையில் 6 நாட்களுக்கு பிறகு பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கின. அதற்காக பெரிய ஜெனரேட்டர், டிராலி மூலம் கொண்டு வரப்பட்டு தூக்குப் பாலம் அருகே உள்ள நடை பாதையில் வைக்கப்பட்டு உள்ளது.



சீரமைப்பு பணிக்காக திருச்சியில் இருந்து ஏராளமான தொழிலாளர்களும் வந்துள்ளனர். விரிசல் விழுந்துள்ள இரும்பு இணைப்புகளில் புதிய தகடுகளை பொருத்தி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலில் மட்டுமே நடைபெறும் இந்த பணிகளை இன்னும் ஓரிரு நாளில் இருந்து இரவிலும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். வெல்டிங் செய்யும் பணிகள் முழுமையாக முடிந்த பின்பு தூக்குப் பாலத்தில் புதிதாக அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படும். தூக்குப் பாலத்தின் பராமரிப்பு பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினதந்தி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)