முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 26, 2018

கஜா புரல் நிவாரணம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - அமைச்சர்!!

No comments :
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து  பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார்.

அப்போதுஅவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது. 

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40,45,510 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், ரூ.6,08,090 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம் திருவாரூர் பகுதிக்கும், ரூ.4,05,720 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம்  பட்டுக்கோட்டை பகுதிக்கும் என மொத்தம் ரூ.10,13,810 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வளர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும்  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.   

இந்த நிகழ்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளாகள்; (பொது) எஸ்.கண்ணபிரான், (வளர்ச்சி) நாகேஸ்வரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை!!

No comments :
கீழக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இதுதவிர இப்பகுதியில் 17–க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதுதவிர கீழக்கரையை ஒட்டி சின்ன மாயாகுளம், பெரிய மாயாகுளம், புது மாயாகுளம், பாரதிநகர், அளவாய்கரைவாடி, செங்கல் நீரோடை, சிவகாமிபுரம், லட்சுமிபுரம், முள்ளுவாடி, மாவிலாதோப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.

தற்போது கீழக்கரை மின் நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். 8–க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். இதில் சில பணியாளர்கள் 12 வருடத்திற்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். எந்த மின் பணியாளர் எந்த பகுதிக்கு செயல்படுகிறார் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.



இது குறித்து முன்னாள் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில், கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக தொலைபேசி வேலை செய்யவில்லை. எந்த பகுதியிலாவது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அலுவலக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய வருவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த தொலைபேசி வேலை செய்யாததால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கீழக்கரை அலுவலகத்தில் உதவி பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணியாளர்களை நியமித்து மின் குறைபாடு சம்பந்தமாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


செய்தி: கீழை தாஹீர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)