Sunday, March 25, 2018
புதிதாக அமைக்கப்பட்ட மைல் கற்களில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு; மற்றுமொரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா?!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும்
நான்கு வழிச்சாலையில் உள்ள மைல் கற்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ராமநாதபுரம் வழியாக குறுக்குச் சாலையில்
செல்லும் வகையில்,
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து
வருகின்றன. இச்சாலையானது,
ராமநாதபுரம் நகருக்குள் செல்லாமல், அருகேயுள்ள
அச்சுந்தன்வயல் கிராமத்திலிருந்து தொடங்கி பட்டணம்காத்தான் வரை சுற்றுச்சாலையாக
அமைக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும்
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், கனரக வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்டு
வரும் சுற்றுச்சாலை வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த
சுற்றுச்சாலைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள
மைல் கற்கள் பலவற்றில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிட்ட
ஊர்களுக்கான கி.மீ. தொலைவு எழுதப்பட்டுள்ளது. இம் மைல் கற்களில் ஹிந்தியிலும்
அந்தந்த ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இவற்றை சிலர் கருப்பு மை கொண்டு
அழித்துள்ளனர். குறிப்பாக,
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானிலிருந்து சத்திரக்குடி
வரையிலான சுற்றுச்சாலைப் பகுதியான சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு
அமைக்கப்பட்டுள்ள மைல் கற்களில் மதுரை, பரமக்குடி, ராமேசுவரம்
என ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், அம்
மைல்கற்களின் மீது தமிழ் மண் எனவும் எழுதியுள்ளனர். இதனால், வெளி
மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே, இச்செயலில்
ஈடுபடுவர்களை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக
ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி!!
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் தேசிய
நினைவிடத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள்
அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள
பேக்கரும்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய
நினைவிடம் உள்ளது. இங்கு,
தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்
பயணிகள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்லுகின்றனர். இங்கு வரும் பொதுமக்களின்
பயன்பாட்டுக்காக பேக்கரும்பு பேருந்து நிறுத்மம் அருகே 4 கழிப்பறைகள்
கட்டப்பட்டன.
ஆனால், தற்போது இந்த கழிப்பறைகள் அனைத்தும்
பயன்படுத்த முடியாத வகையில் பூட்டப்பட்டுள்ளன. இதனால், கலாம்
தேசிய நினைவிடத்துக்கு வரும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள்
சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த கழிப்பறைகளை முறையாகப் பராமரித்து
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவேண்டும் என்பதுடன், இங்கு
தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் கூடுதலாக சில கழிப்பறைகளும் கட்டப்பட வேண்டும்
என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
குழந்தை தொழிலாளர் மீட்பு சேவை எண்-1098 விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக, மாவட்டக்
குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை
தொழிலாளர் மீட்பு குறித்த விழிப்புணர்வு அவசர இலவச தொலைபேசி சேவை எண்-1098 வில்லைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் தலைமை வகித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்
கலாவதி, சைல்டு-லைன் இயக்குநர்கள் கே. கருப்புச்சாமி, தேவராஜ், ஆட்டோ
சங்கத் தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி வட்டாரப்
போக்குவரத்து ஆய்வாளர் பி. மாணிக்கம், மகளிர் காவல் நிலைய
சார்பு-ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர், குழந்தைகள் பாதுகாப்பு
விழிப்புணர்வு குறித்த 24
மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி எண்-1098 வாசகம் பொறித்த வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டியும், பொதுமக்களிடம்
வழங்கியும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.
இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் துறை
பணியாளர்கள்,
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)