முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 20, 2018

கீழக்கரை அருகே வாகன விபத்து; 27 பேர் காயம்!!

No comments :
கீழக்கரை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் மினி சரக்கு வாகனம், திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ரைஸ்மில் காலனியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மினிசரக்கு வாகனத்தில் கீழக்கரையில் நடந்த திருமண நாள் குறிக்கும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பினர். இவர்கள் சென்ற வாகனம் கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், மினி சரக்கு வாகனத்தில் பயணம் செய்த கல்பனா, அமராவதி,பிச்சைமுத்து, சின்னப்பொண்ணு ஆகியோர் உள்பட 9 பேர் கீழக்கரை அரசு மருத்துவமனையிலும், சுமதி, புஷ்பவள்ளி, முத்துமாரி, நாகவள்ளி, முத்துக்கனி ஆகியோர் உள்பட 18 பேர் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், உடனடியாக தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அரசு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். அப்போது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், எலும்பு முறிவு மருத்துவர் மனோஜ்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மென்னந்தி நாகரெத்தினம், முருகன், சந்தோஷ், தஞ்சாவூர் தம்பிகோட்டை ரவி, திருவாரூர் மேலமருதூர் மதிவாணன், சிவகாசி பிரகாஷ், ராமநாதபுரம் காரான் கவாஸ்கரன், தூத்துக்குடி வீரபாண்டியபுரம் ஹரிகரன் ஆகியோர் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 


திருப்புல்லாணி அருகே உள்ள தெற்கு மேதலோடையை சேர்ந்த காந்தி மகன் முனியராஜ், அங்குச்சாமி மகன் ராஜ்குமார் ஆகியோர் இலங்கை கண்டியில் உள்ள ஏஜெண்டு அசன்பாய் என்பவரின் மூலம் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதாக தெரிவித்தனர். செர்ஜியா நாட்டில் தோட்ட வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் மாதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் என்றும், அதற்காக ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இவர்களின் பேச்சை நம்பி தலா ரூ.5 லட்சம் பணத்தினை அவர்கள் இருவர் மூலம் இலங்கை ஏஜெண்டு அசன்பாய் என்பவரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் வைத்து கொடுத்தோம்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் எங்களை கடந்த மாதம் 17-ந்தேதி சென்னைக்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு மர்தானா என்ற பகுதியில் விடுதி ஒன்றில் தங்க வைத்த பின்னர் எங்களிடம் இலங்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் ஒருசில நாட்களில் செர்ஜியாவிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். நாங்களும் அதனை நம்பி விடுதியில் தங்கியிருந்தோம். 5 நாட்கள் கழித்து வந்த அவர்கள் ரூ.5,000 இலங்கை பணத்தினை கொடுத்து சாப்பாடு செலவிற்கு வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் நாங்கள் செய்வதறியாது திகைத்து போனோம்.

எப்படியும் வந்துவிடுவார்கள் என்று ஒருமாதம் வரை காத்திருந்தோம். ஆனால், அவர்கள் வராததால் நாங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விடுதி கட்டணம் மற்றும் விமான கட்டணத்திற்கு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் அனுப்ப சொல்லி அது வந்ததும் விடுதியை காலி செய்து ராமநாதபுரம் வந்துள்ளோம். வெளிநாட்டு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 8 பேரிடமும் ரூ.40 லட்சம் வாங்கி மோசடி செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தினை திரும்ப பெற்றுத்தர வேண்டும். எங்களை போன்று மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)