முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 7, 2018

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தி வரும் வட்டாரங்களை சார்ந்த களப்பகுதிகளில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ள மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், குறைந்தது 12 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் செல்லிடப்பேசி மற்றும் கணினி இயக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.



சமுதாய ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ. 2 ஆயிரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மூலம் வழங்கப்படும். சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று உதவுதல், குழுக்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதை கண்காணித்தல், வங்கிகளால் நடத்தப்படும் கடன் வழங்கும் முகாம்களுக்கு உதவுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விரும்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை
திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
ஆட்சியர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்-623503

என்ற முகவரிக்கு இம்மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களிலும் மார்ச் 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் மார்ச் 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் வட்டாரத்தில் ஆர்.எஸ்.மடை, ராமேசுவரத்தில் நடராஜபுரம், பரமக்குடியில் பொட்டிதட்டி, திருவாடானையில் கட்ட விளாகம், முதுகுளத்தூரில் எம்.கொட்டகுடி, கடலாடியில் வாலிநோக்கம், கமுதியில் ஏ.தரைக்குடி, கீழக்கரை அருகே உத்தரவை ஆகிய கிராமங்களில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.


இதில் பொது விநியோகத் திட்டம் சம்பந்தமான தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படவுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

இளையோர் மன்றத்தில் மாத உதவித்தொகையுடன் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா இளையோர் மன்றத்தில் மாத உதவித்தொகையுடன் சேவை செய்ய விரும்புவோர் இம்மாதம் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நேரு யுவகேந்திரா அமைப்பின் துணை இயக்குநர் மு.சடாச்சரவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நேரு யுவகேந்திரா இளையோர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புக்கு சமூகப் பணியில் தேசிய இளையோர் தொண்டராக சேவையாற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.



வயது 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேல் கல்வி, கணினி அறிவு பெற்றவர்கள், பெண்கள், இளைஞர் மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாதம் ரூ.5 ஆயிரம் மதிப்பூதியமாகவும் வழங்கப்படும். 

ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம், பாலினம் போன்ற சமூகப் பிரச்னைகளில் விழிப்புணர்வு உண்டாக்கும் பணிகளை அவரவர் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்வார்கள். விண்ணப்பிப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இம்மாதம் 13 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விபரங்களுக்கு
துணை இயக்குநர்,
நேருயுவ கேந்திரா,1-372,
பாரதிநகர்,
ராமநாதபுரம்


என்ற முகவரியிலும் தொலைபேசி எண் 04567-230937 மற்றும் 9585535722 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)