(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 4, 2018

பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக ”காவலன்" செயலி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக காவல்துறையில் காவலன் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுஉள்ளது. பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக காவல்துறையினர் உதவி கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசி எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பெண்கள் மற்றும் முதியோர்கள் தனியாக செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது செல்போன்களில் உள்ள இந்த செயலியை தொட்டால் போதும், சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்று, அடுத்த 5 வினாடிகளில் மீண்டும் அவரது அலைபேசிக்கு அழைப்பு வரும். மேலும், அந்த நேரத்தில் இருந்து செல்போனில் ஜி.பி.எஸ். தானாக இயங்க ஆரம்பித்து, அலைபேசி கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி, ஒளியுடன் செயல்பட தொடங்கிவிடும்.



பாதிக்கப்பட்ட நபர் பேச முடியாத சூழ்நிலையில் இருக்கும்பட்சத்தில் ஜி.பி.எஸ். உதவியுடன் சம்பந்தப்பட்ட இடம் அறிந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அங்கிருந்து போலீசார் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் அளிக்கப்படும். மேலும், இந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசிக்கு தங்களது இருப்பிடம் மற்றும் வரைபடம் பகிரப்படும். இணைய இணைப்பு வசதியில்லாத இடங்களில் மேற்படி செயலியை உபயோகித்தாலும், கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி குறுஞ்செய்தி எச்சரிக்கை மூலம் தகவல் சென்றடையும்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் முக்கியத்துவம், நன்மைகள், பயன்படுத்தும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கோகுலகிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காளசுவரன், செய்யது அம்மாள் பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த செயலி பற்றி எடுத்துரைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment