முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 26, 2018

கஜா புரல் நிவாரணம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - அமைச்சர்!!

No comments :
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து  பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார்.

அப்போதுஅவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது. 

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40,45,510 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், ரூ.6,08,090 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம் திருவாரூர் பகுதிக்கும், ரூ.4,05,720 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம்  பட்டுக்கோட்டை பகுதிக்கும் என மொத்தம் ரூ.10,13,810 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வளர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும்  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.   

இந்த நிகழ்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளாகள்; (பொது) எஸ்.கண்ணபிரான், (வளர்ச்சி) நாகேஸ்வரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை!!

No comments :
கீழக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இதுதவிர இப்பகுதியில் 17–க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதுதவிர கீழக்கரையை ஒட்டி சின்ன மாயாகுளம், பெரிய மாயாகுளம், புது மாயாகுளம், பாரதிநகர், அளவாய்கரைவாடி, செங்கல் நீரோடை, சிவகாமிபுரம், லட்சுமிபுரம், முள்ளுவாடி, மாவிலாதோப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.

தற்போது கீழக்கரை மின் நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். 8–க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். இதில் சில பணியாளர்கள் 12 வருடத்திற்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். எந்த மின் பணியாளர் எந்த பகுதிக்கு செயல்படுகிறார் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.



இது குறித்து முன்னாள் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில், கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக தொலைபேசி வேலை செய்யவில்லை. எந்த பகுதியிலாவது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அலுவலக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய வருவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த தொலைபேசி வேலை செய்யாததால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கீழக்கரை அலுவலகத்தில் உதவி பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணியாளர்களை நியமித்து மின் குறைபாடு சம்பந்தமாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


செய்தி: கீழை தாஹீர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, November 20, 2018

கஜா புயல் நிவாரணம்; ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் குடிநீர் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம்,- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பிய வாகனங்களை கலெக்டர் வீரராகவராவ்   கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அதன்பின்னர்அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் துயர் துடைக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பங்களிப்பு செய்திடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக 2 குழுக்களாக மொத்தம் 40 மர அறுவை இயந்திரங்களுடன், 80 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


அதேபோல நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 6 மர அறுவை இயந்திரங்களுடன் 6 பணியாளர்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் மீட்புப் பணிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 6 குழுக்களாக 30 மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர ஆவின் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 265 கிலோ பால் பவுடர் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திட ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டு, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 11 டேங்கர் லாரிகளில் 1,14,500 லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.  மேலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இ;வ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, November 13, 2018

கஜா புயல் வருகை, ராமநாதபுர மாவட்டத்தில் தயார் நிலையில் மீட்புக்குழு - கலெக்டர்

No comments :
தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது வலுப்பெற்று கடும்புயலாக மாறி உள்ளது. இதற்கு தற்போது கஜா(யானை) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ள இந்த கஜா புயல் நாகபட்டிணத்தில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கஜா புயல் முதலில் கடலூருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போதைய கணக்கீட்டின்படி கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

இதன்காரணமாக இந்த பகுதியில் பலத்த புயல்காற்றுடன் மழை பெய்யும் என்றும் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. கஜா புயல் வலுவிழக்க வாய்ப்பில்லை என்றும் அதிக வலுவடைந்து அதிதீவிர புயலாகத்தான் மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. 15–ந் தேதி முற்பகலில் பாம்பனுக்கு இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதுதொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கஜா புயலை எதிர்கொள்வது தொடர்பாகவும், மாவட்ட மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இதன்முடிவில் கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

வானிலை ஆய்வு மையம் கஜா புயல் தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து முதல்–அமைச்சர் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் 24 மணி நேர தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட 15 மண்டல அளவிலான குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது.

39 தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கவும், உடனடி தேவைகளை நிறைவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க வசதியாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பகுதிகளில் 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 91 திருமண மண்டபங்கள் என 148 பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளன. இதற்கான பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உணவு, தண்ணீர், கழிப்பறை, ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 5 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுஉள்ளனர். அதிக புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளதால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வெட்டி அகற்றும் எந்திரம், 141 ஜே.சி.பி. எந்திரங்கள், 52 பொக்லைன்கள் தயார்நிலையில் வைக்கபட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை பாதுகாக்கவும், தேவையான வசதிகள் செய்யவும் முழுஅளவில் தயாராக உள்ளது.


எனவே, மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மீனவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும். மீனவர்கள் தற்போதைய நிலையில் கடலுக்கு செல்லவில்லை. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த சமயத்தில் பாம்புகள் தொந்தரவை தவிர்க்க பாம்பு பிடிப்பவர்கள் 21 பேர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாடுகளை பிடித்து பாதுகாக்க 132 பேர் தயாராக உள்ளனர். 72 அதிதீவிர பயிற்சி போலீசார் 24 மணி நேர தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் மணல் மூடைகள்அ னைத்து பகுதிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, November 12, 2018

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய பதிவு செய்யலாம்!!

No comments :

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2018–19–ம் ஆண்டின் தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.


சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் முன்கூட்டியே காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.


காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது ஏக்கருக்கு ரூ.341 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சென்னையில் ஒர் புதிய உதயம் ”GO SERVICE”!!

No comments :
நம் முகவையைச்சார்ந்த நண்பர்களால் சென்னை நுங்கம்பாக்கத்தில், குளிர்சாதன சாதனங்கள் மற்றும் வாசிங் மெசின் களுக்கான் பழுது நீக்கும் சேவை நிலையம் திறக்கப்பட்டது.




சென்னை மற்றும் சுற்றுப்புற சேவைக்கு அனுகலாம். 



தொடர்புக்கு தொலைபேசி எண் +9176166600.



தகவல்: திரு. ஹமீது, கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, November 7, 2018

வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது:

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் 200 ரூபாய்,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய்,
பிளஸ் 2 தேர்ச்சிக்கு 400,
பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம் மூன்றாண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தொகை நேரடியாக மனுதாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதோடு தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்குள் இருப்பதோடு குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.


தொலைதுாரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர் தொடர்ந்து மூன்றாண்டுகள் உதவித் தொகை பெற்ற வங்கி கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்.

உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காதவருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பத்தாண்டுகள் வரை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பும், அதற்கு கீழும் 600,
பிளஸ் 2 தேர்ச்சிக்கு 750,
பட்டதாரிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.


இவ்வாறு கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, November 4, 2018

தீபாவளி பலகாரங்கள் விற்பனைக்கு கட்டாயமாக உரிமம் பெற வேண்டும், புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது பண்டிகை காலம் தொடங்கிஉள்ளதால் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 மற்றும் விதிகள் 2011-ன் கீழ் உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும்.


மேலும் இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், உணவு பாதுகாப்பு துறையை 94440 42322 என்ற எண்ணிலோ அல்லது ராமநாத புரம் மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண்- 04567 231170-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக ”காவலன்" செயலி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக காவல்துறையில் காவலன் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுஉள்ளது. பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக காவல்துறையினர் உதவி கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசி எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பெண்கள் மற்றும் முதியோர்கள் தனியாக செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது செல்போன்களில் உள்ள இந்த செயலியை தொட்டால் போதும், சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்று, அடுத்த 5 வினாடிகளில் மீண்டும் அவரது அலைபேசிக்கு அழைப்பு வரும். மேலும், அந்த நேரத்தில் இருந்து செல்போனில் ஜி.பி.எஸ். தானாக இயங்க ஆரம்பித்து, அலைபேசி கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி, ஒளியுடன் செயல்பட தொடங்கிவிடும்.



பாதிக்கப்பட்ட நபர் பேச முடியாத சூழ்நிலையில் இருக்கும்பட்சத்தில் ஜி.பி.எஸ். உதவியுடன் சம்பந்தப்பட்ட இடம் அறிந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அங்கிருந்து போலீசார் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் அளிக்கப்படும். மேலும், இந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசிக்கு தங்களது இருப்பிடம் மற்றும் வரைபடம் பகிரப்படும். இணைய இணைப்பு வசதியில்லாத இடங்களில் மேற்படி செயலியை உபயோகித்தாலும், கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி குறுஞ்செய்தி எச்சரிக்கை மூலம் தகவல் சென்றடையும்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் முக்கியத்துவம், நன்மைகள், பயன்படுத்தும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கோகுலகிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காளசுவரன், செய்யது அம்மாள் பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த செயலி பற்றி எடுத்துரைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)