Sunday, October 28, 2018
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.20லட்சம் மோசடி!!
ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக
கூறி ரூ.3.20லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸார் சனிக் கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் அண்ணா சாலையில் உள்ளஜவுளிக்கடை ஒன்றில் பணி
செய்து வந்தவர்,
சுந்தர்ராஜன் மகள் சுதா(32).இவரிடம்
ராமநாதபுரம் அண்ணாநகரில் வசித்து வரும் கோபிநாத்தின் மனைவி காளீஸ்வரி, மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு பிரிவில் பணி செய்து வருவதாகக்கூறி அரசு
வேலை வாங்கித் தருவதாக சுதாவிடம் ரூ.3.25லட்சத்தை பெற்றுக்கொண்டு
திருப்பித் தராமல் இருந்து வந்தாராம்.
கடந்த 18.11.2017 ஆம் தேதி நடந்த இச்சம்பவம்
தொடர்பாக சுதா ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கொடுத்த
புகாரின் பேரில் போலீஸார் காளீஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள
காளீஸ்வரியைத் தேடி வருகின்றனர்.
செய்தி:
தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, October 24, 2018
ராமநாதபுரம் ஐஏஎஸ். அகாதெமியில் குரூப்.2 பணிக்கான மாதிரித்தேர்வு!!
ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ். அகாதெமியில் நவம்பர் 4 ஆம்
தேதி டிஎன்பிஎஸ்சி. குரூப்.2 பணிக்கான மாதிரித்தேர்வு இலவசமாக
நடத்தப்பட உள்ளது.
இது குறித்து அகாதெமியின் நிறுவனர் டி.சுகேஷ்சாமுவேல்
செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: -
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக
சுரேஷ் அகாதெமி கல்விச்சேவை செய்து வருகிறது. இங்கு வரும் நவம்பர் 4 ஆம்
தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பதவிக்கான
மாதிரித்தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் தமிழகத்தின் அனைத்துப் போட்டியாளர்களும் கலந்து
கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அகாதெமியின் பாடக்குறிப்புகள், நடப்பு
நிகழ்வுகள்,
விரிவான விளக்கங்களுடன் விடைகள் ஆகிய அனைத்தும் இலவசமாக
வழங்கப்படுகிறது.
இதற்கென 7550352916 மற்றும் 7550352917 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 முக்கிய அலுவலர்கள் இடமாற்றம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 11 அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பணியிட மாற்றம் செய்து
செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள அலுவலர் பெயர், பதவி
மற்றும் முன்பு பணியாற்றிய பதவி (அடைப்புக்குறிக்குள்) விவரம்:
பொன்.கார்த்திகேயன்- ராமநாதபுரம் வட்டாட்சியர்
(ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர்)
தமீம்ராஜா- ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் (ராமநாதபுரம்
ஆயத்துறை மேற்பார்வை அலுவலர்)
பி.சேகர்- திருவாடானை வட்டாட்சியர் (முதுகுளத்தூர்
சமூகப்பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்)
ஹரி.சதீஷ்குமார்- ராமநாதபுரம் ஆய மேற்பார்வை அலுவலர்
(கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர்)
சாந்தி- உப்பூர் அனல் மின் திட்ட நில எடுப்புப் பிரிவு
வட்டாட்சியர் (திருவாடானை வட்டாட்சியர்)
சபீதாள்பேகம்- பரமக்குடி நத்தம் நிலவரித் திட்ட தனி
வட்டாட்சியர் (உப்பூர் அனல் மின் திட்ட நில எடுப்புப்பிரிவு வட்டாட்சியர்)
சிக்கந்தர் பபிதா- கமுதி வட்டாட்சியர் (பரமக்குடி நத்தம்
நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர்)
சுரேஷ்குமார்- ராமநாதபுரம் பேரிடர் மேலாண்மைத்துறை தனி
வட்டாட்சியர் (மாவட்ட ஆயத்துறை அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர்)
சரவணன்- கீழக்கரை வட்டாட்சியர் (ராமநாதபுரம் பேரிடர்
மேலாண்மைத்துறை தனி வட்டாட்சியர்)
ராஜேஸ்வரி- முதுகுளத்தூர் சமூகப்பாதுகாப்புத்திட்ட தனி
வட்டாட்சியர் (கீழக்கரை வட்டாட்சியர்).
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, October 22, 2018
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!!
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய சாலை மேம்பாலம் அமைக்க
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி வைத்தார்.
ராமநாதபுரம் -கீழக்கரை சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில்
நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ரூ.30.74 கோடி மதிப்பில்
புதிய சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமையில்
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மற்றும் உச்சிப்புளி ரயில் நிலையங்களுக்கு
இடையே, ராமநாதபுரம் நகரப் பகுதி, ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில்
பாதுகாப்பு இரயில்வே கடவு உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் ராமநாதபுரம்
நகரப்பகுதியில்,
இரயில்கள் கடக்கும் நேரத்தில் இந்த இரயில்வே கடவு
மூடப்படுவதால் ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்
சூழ்நிலை உள்ளது. எனவே,
பொதுமக்களின் சிரமத்தினை போக்கிடும் விதமாக எனது
கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் இந்த இரயில்வே கடவு அருகே புதிய சாலை
மேம்பாலம் அமைத்திட உத்தரவிட்டார்கள்.
அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நில
ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14
கோடி மதிப்பிலும், கட்டுமானப் பணிகளுக்கு
தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என
மொத்தம் ரூ.30.74
கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை
வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த சாலை மேம்பாலம்
அமைப்பதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படடுள்ளது. இம்மேம்பாலமானது, மொத்தம்
675.56 மீட்டர் நீளத்திலும்,
11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல, பாலத்திற்கான
அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம்
அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை 24 மாத காலத்திற்குள் நிறைவேற்றிட
திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மாவட்டத்தில் ராமநாதபுரம்
நகராட்சிகுட்பட்ட பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலும், ராமமேஸ்வரம்
நகரட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.7 கோடி மதிப்பிலும், கீழக்கரை
நகராட்சிகுட்பட்ட பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.20 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோல
அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலையினை செப்பனிடுவதற்கு ரூ.30 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. இவ்வாறு
தெரிவித்தார்.
இவ்விழாவில், நெடுஞ்சாலைத்துறை
(திட்டங்கள்- மதுரை வட்டம்) கண்காணிப்பு பொறியாளர் யு.பழனியப்பன், கோட்டப்
பொறியாளர் எம்.ஆர்.கேந்திரதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
பி.ஜெயஜோதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை
உதவி கோட்டப் பொறியாளர் என்.ராஜசேகர், அரசு அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, October 21, 2018
சபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று காலை புதிய
பஸ் நிலையத்திற்கு திடீரென சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். புதிய பஸ் நிலைய
பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசுப்புழு
ஒழிப்பு நடவடிக்கைகள்,
சுகாதார மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போன்ற பணிகளை ஆய்வு செய்தார். பஸ் நிலைய பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட
கலெக்டர் மாடி பகுதிக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் நிற்க கூட முடியாத அளவிற்கு கடைக்காரர்கள்
ஆக்கிரமித்து வைத்திருந்ததை கண்ட கலெக்டர் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த
உத்தரவிட்டார்.
மேலும், பாலூட்டும் தாய்மார்கள் அறையை மறைத்து
அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். மக்களுக்கு
இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளில் இருந்து பழங்கள், பேக்கரி
உணவுகள் போன்றவற்றை நகரசபை வண்டிகளில் அள்ளி அப்புறப்படுத்துவதற்கு பதிலாக பயனுள்ள
வகையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இலவசமாக அள்ளிக்கொடுத்தார். இதனால்
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன்பின்னர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்ற கலெக்டர்
திரும்பி வந்து பார்த்தபோது மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைத்திருந்ததை
கண்டு ஆத்திரமடைந்த அவர் நகராட்சி குப்பை வண்டிகளை வரவழைத்து ஆக்கிரமிப்பு கடைகளை
உடனடியாக அள்ளிச்செல்ல உத்தரவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த முறை ஆய்வின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்த போதும் மீண்டும்
ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும், தொடர் புகார்கள் வந்திருந்ததாலும்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 வீதம் 10
கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பிறகு கலெக்டர் வீரராகவராவ் கூறியதவாது:- ராமநாதபுரம்
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்ட
நிர்வாகத்தின் மூலம்,
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா
போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நகராட்சி,
பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி
அமைப்புகள் சார்ந்த அலுவலர்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல்
சுத்தமாக பராமரித்து சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ள
அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் தொடர் புகார்கள் வந்ததன்
அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம்
வழங்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் ஆக்கிரமிப்புகளை
அகற்றாமல்,
தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய
நிலையிலேயே இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் நகரசபை நிர்வாகத்தின் மூலம் தலா ரூ.1000 வீதம் 10
கடைகளுக்கு மொத்தம் ரூ.10,000 அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகரசபை அதிகாரிகள் கவனமாக
கண்டிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அடுத்தமுறை
ஆய்வின்போது ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களின் உரிமம்
ரத்து செய்யப்பட்டு மறு டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த
ஆய்வின் போது நகரசபை துப்புரவு ஆய்வாளர் இளங்கோவன் உள்பட அதிகாரிகள் உடன்
இருந்தனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, October 16, 2018
அப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது!!
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர்கள், மாணவர்களுக்கு
உத்வேகமாய் விளங்கியவர். ஜனாதிபதி பதவிக்கு புதிய அடையாளம் கொடுத்தவர். அணுகுண்டு
சோதனை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகறியச் செய்தவர். பல்வேறு கண்டுபிடிப்புகளை
உருவாக்கி மாபெரும் விஞ்ஞானியாகவும், பேராசிரியராகவும் பல்வேறு
பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர்.
அப்துல்கலாம் மறைந்தாலும், அவர் மீது எண்ணற்ற
மக்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். நேற்று அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நாடு
முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அவரது சொந்த ஊரான ராமேசுவரத்துக்கு பல பகுதிகளில் இருந்தும்
மாணவ–மாணவிகள் ஆர்வமாக வந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதையொட்டி
ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடம் மலர்களாலும், வண்ண
விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவருடைய அண்ணன் முகமது
முத்து மீரான் லெப்பை மரைக்காயர், அவருடைய மகள் நசீமா மரைக்காயர், ஜெய்னுலாபுதீன், நிஜாமுதீன்
உள்பட குடும்பத்தினரும்,
ஜமாத்தலைவர் அப்துல் ஹமீது உள்பட ஜமாத் நிர்வாகிகளும்
சிறப்பு தூஆ செய்தனர்.
அதன் பின்னர் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தாசில்தார்
சந்திரன் ஆகியோர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர்.
சென்னை புற்றுநோய் சிகிச்சை மைய டாக்டர் விஜயராகவன், நடிகர் தாமு மற்றும்
பல்வேறு அமைப்புகள்,
கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், பள்ளி–கல்லூரி
மாணவ–மாணவிகள் வந்து மரியாதை செலுத்தினார்கள். அப்துல்கலாம் நினைவு மண்டபம் முன்பு
நின்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
இதேபோல அவருடைய சிலை முன்பும் தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான மாணவ–மாணவிகளும், பொதுமக்களும்
மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட
அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
செய்தி:
தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, October 9, 2018
ராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக்.
10) தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, ஆட்சியர்
கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்
திட்டம், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், நீட்ஸ்
திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு
வருகிறது. இத்திட்டங்கள் குறித்து விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக, ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கினை, ராமநாதபுரம் மாவட்டத்
தொழில் மையமும்,
கதர் கிராமத் தொழில்கள் ஆணையமும் இணைந்து நடத்துகின்றன.
இதில், தொழிலில் வெற்றி அடைந்த சாதனையாளர்கள், வங்கி மேலாளர்கள், சிறுதொழில்
சங்கத் தலைவர்கள்,
தொழிலதிபர்கள் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.
எனவே, தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த
வாய்ப்பினை பயன்படுத்தி,
இங்கு வந்து தகுந்த ஆலோசனைகள் பெறலாம் என, அதில்
தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது!!
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை
திங்கள்கிழமை உடைத்து திருட முயன்றவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து
போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக
தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இரவு
நேரப் பாதுகாப்பு பணிக்கு பாதுகாவலர்கள் இல்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில்
ஏ.டி.எம். மையத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, அங்கிருந்த
ஆட்டோ ஓட்டுநர்கள் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு
ஒருவர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணப் பெட்டகத்தை திறந்துள்ளார். அதையடுத்து, ஆட்டோ
ஓட்டுநர்கள் ஏ.டி.எம். மையத்தை பூட்டிவிட்டு, ரயில்வே காவல் துறைக்கு
தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ரயில்வே போலீஸார், அந்த நபரைப்
பிடித்தனர்.
மன நோயாளி போல் அந்த நபர் நடந்துகொண்டாலும், திருட்டில்
ஈடுபடுவதற்கு முன் கண்காணிப்பு கேமரா மற்றும் இணைப்பு வயர்களை துண்டித்திருப்பது
தெரியவந்தது. அந்த மர்ம நபரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று
தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி:
தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, October 8, 2018
ராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி!!
அரபிக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு
நிலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை
பெய்து வருகின்றது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன் தினம்
இரவில் சுமார் 3
மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நேற்று பகல்
முழுவதும் மழை இல்லாமல் இருந்தது. பலத்த மழையால் ராமேசுவரம் கோவிலின் கிழக்கு
வாசல் வழியாக புகுந்த வெள்ளநீர் ஆஞ்சநேயர் சன்னதி வரையிலும் பிரகாரத்தில் அதிக
அளவில் தேங்கி நின்றது.
இதே போல் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம், அம்பாள்
சன்னதி கொடி மர பிரகாரம் பகுதியிலும் மழை நீர் தேங்கி நின்றது. கோவிலுக்குள்
புகுந்த வெள்ள நீரானது கோவில் பணியாளர்களால் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பும் மற்றும் விக்டோரியா நகர் பகுதியிலும்
மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதே போல் ராமநாதபுரத்திலும் பலத்த காற்று மற்றும் இடி
மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து
மின்சாரம் தடைபட்டது. 5–க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து
விழுந்ததாலும்,
அதனை உடனடியாக வெட்டி சரிசெய்வதற்கு முடியாத வகையில்
தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததாலும் மின்பணியாளர்கள் பழுதை சரிசெய்ய
முடியாமல் போனது.
இதன்காரணமாக 13 மணி நேரம் மின்சாரம்
தடைபட்டதால் ராமநாதபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கின.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த
24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
கடலாடி–12.8,
கமுதி– 33,
ராமநாதபுரம்–54,
பள்ளமோர்குளம்–4.5,
பாம்பன்–41.1,
தீர்த்தாண்டதானம்–15,
ஆர்.எஸ்.மங்கலம்–54,
வாலிநோக்கம்–12.8,
பரமக்குடி–16.2,
திருவாடானை–23.2,
தொண்டி–15.2,
வட்டாணம்–6,
முதுகுளத்தூர்–28.8,
மண்டபம்–39,
ராமேசுவரம்–56.2,
தங்கச்சிமடம்–45.2.
செய்தி:
தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, October 4, 2018
மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!
மீன்வளத்துறை
மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் மீனவ
கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து
அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பயிற்சி
அளித்திடும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வழங்கி உள்ளது.
கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய
உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து
பயன்பெறலாம்.
இத்திட்டத்தின்
கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை
மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in என்ற முகவரியில் இருந்து
கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல
மீன்துறை துணை இயக்குனர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக வேலைநாட்களில்
நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்
மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி
செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு
பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை துணை
இயக்குனர், மீன்துறை
உதவி இயக்குனர் அலுவலகங்களை நேரில் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்
வீரராகவ ராவ் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரை - மங்களேஸ்வரி மினி பஸ் சேவை நிறூத்தம்!!
கீழக்கரையிலிருந்து மங்களேஸ்வரி நகர் வழியாக சென்று
கொண்டிருந்தமினி பஸ் சேவை கடந்த சில நாட்களாக இயக்காமல்
நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அன்றாடம் மினிபஸ்சை நம்பியுள்ள ஏழை, எளிய
நடுத்தர மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
கீழக்கரையில் இருந்து 500 பிளாட், மாலாகுண்டு, இந்திராநகர், திருவள்ளுவர்
நகர், சின்னமாயாகுள்,
முத்துராஜ் நகர், பாரதிநகர், பெரிய
நைனார் அப்பா தர்கா வழியாகபுல்லந்தை மங்களேஸ்வரி நகர் வரை மினி பஸ்சின் வழித்தடம்
உள்ளது. பள்ளி,
கல்லுாரி நேரங்களில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும்
மிக பயனுள்ளதாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை
ஏற்றி அடைத்துக்கொண்டு,
மினிபஸ் செல்லும் வழித்தடங்களில் டிக்கெட் போட்டு ஏற்றி
வருவதால், அதிருப்தியடைந்த மினி்பஸ் நிர்வாகத்தினர் சேவையை நிறுத்தியுள்ளனர்.
மினிபஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு கூறியதாவது:
வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியில்லாமல்
மினிபஸ் செல்லும் வழித்தடத்தில், அதிகளவு விபத்து ஏற்படுத்தும் வகையில்
பயணிகளை ஏற்றிச்செல்வது தொடரவே செய்கிறது.
பஸ்சில் குறைவான வருவாயை ஈட்டுவதால், ஊழியர்களுக்கு
சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்
மின் பஸ் இயங்கும்,
என்றார்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து!!
கீழக்கரை
அருகே நேற்று காலை கன்டெய்னர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண்
ஒருவர் பலியானார். மாணவி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதனால்
அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 59 பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது, தூத்துக்குடியிலிருந்து உப்பூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியும்-அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில், பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும் பவித்ரா(17), முனிஸ்வரி (16), பிரியதர்ஷினி(13), மகேஸ்வரி (16) உள்பட உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ
இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பஸ்சின் இடிபாடுகளில்
சிக்கிய மாணவியை உள்பட பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்புல்லாணி
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் 2மணி
நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)