(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 14, 2018

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம்!!

No comments :
முதுகுளத்தூர்-சாயல்குடி புதிய சாலையின் நடுவில் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்யாமல் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலை  பொறியாளர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாயல்குடி-தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை செல்லும் கடலாடி-முதுகுளத்தூர் சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. 

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், மின்வாரிய பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் காவிரி குழாய் இடம் மாறி செல்கிறது. சாலையின் குறுக்கே குழாய் இருப்பதால், போக்குவரத்து செல்ல செல்ல புதிய சாலை நாசமடைந்து, குழாயும் சேதமடைந்து விட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி சாலையோரம் பெருகி வருகிறது. 

நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக ஓடுகிறது. இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சாலையின் வழியே வாலிநோக்கம் அரசு உப்பளத்திலிருந்து உப்புகளை ஏற்றி அதிக பாரத்துடன் லாரிகள் வருவதால், உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சக்கரம் சிக்கிவிடும் அபாயத்தில், பேருந்துகளை இச்சாலையில் இயக்க முடியாமல் ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் பள்ளம் தெரியாமல் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த அவலநிலை நீடிப்பது குறித்து, பொதுமக்கள் காவிரி கூட்டுக்குடிநீர் உதவிபொறியாளர், மாநில நெடுஞ்சாலைதுறை உதவிபொறியாளருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.
 

பொதுமக்கள் கூறுகையில், ‘‘இரண்டு உதவி பொறியாளர்களும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள்தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கடலாடி-முதுகுளத்தூர் புதிய சாலையில் உடைந்து ஓடும் காவிரி குடிநீர் குழாயை சரிசெய்து, சாலையை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment