(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 13, 2018

ராமேசுவரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்; நீதிபதி ஆய்வு!!

No comments :
ராமேசுவரத்துக்கு தர்ப்பண பூஜைகள், தில ஹோம பூஜைகள், தோ‌ஷ நிவர்த்தி பூஜைகளுக்கு பக்தர்களிடம் புரோகிதர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கட்டணம் நிர்ணயித்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்தனர். இந்த பகல் கொள்ளையால் பக்தர்கள் மனம் புழுங்கி வந்தனர்.
இதே போல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராட பக்தர் ஒருவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தால் ரூ.25 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாகவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகளுக்கு முழுமையாக தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்றும் பக்தர்கள் மனம் வெதும்பினர்.


இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்குள் ஆய்வு செய்ததுடன் பக்தர்கள் மற்றும் புரோகிதர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவருடன் இலவச சட்ட உதவி சார்பு நீதிபதி ராமலிங்கம், ராமேசுவரம் நீதிபதி ஸ்ரீதேவி ஆகியோரும் வந்திருந்தனர்.
அதிரடி ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் புரோகிதர்கள் திக்குமுக்காடினர். சிலர் நீதிபதிகளைக்கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர்.
விசாரணையில் பூஜைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், தீர்த்தமாட பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதும் தெரியவந்துள்ளது. நீதிபதியின் ஆய்வறிக்கை ஐகோர்ட்டில் விரைவில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment