Thursday, August 16, 2018
ராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா; கலெக்டர் நடராஜன் தேசியக் கொடி ஏற்றினார்!!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின்
சார்பில் சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் தேசியக்
கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக அவரை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட கலெக்டர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை உள்பட 28 காவல்துறை அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் உள்பட பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த 64 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 83 பேருக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 83 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நகை வழிப்பறி கும்பலை துணிச்சலுடன் விரட்டி மடக்கி பிடித்த கிராம மக்கள் 3 பேருக்கு கலெக்டர் நடராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கொடிநாள் வசூலில் சாதனைபடைத்த ராமநாத புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமாருக்கு கவர்னரின் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட திட்ட இயக்குனர் ஹெட்சிலீமா அமாலினி, வருவாய் கோட்டாட்சியர் சுமன், பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment