(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 27, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 3000 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பண்ணைக்குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகி பயனடையலாம்.


மேலும் மழையளவு குறைவின் காரணமாக வறட்சி ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இதற்கு தீர்வாக வயல் வெளிகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம். இதனால் பெய்யும் மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலம் உரிய நேரத்தில் பயிர்களுக்கு உயிர்நீர் அளித்து, நல்ல மகசூல் பெறலாம். அதே வேளையில் பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்து அதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம்.


அத்துடன் மாவட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் அல்லது மாவட்ட கருவூல கட்டடம் முதல் தளத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் அல்லது பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் ஆகியவற்றில் தங்களது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment