Wednesday, November 15, 2017
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க நவ-30ம் தேதி கடைசி நாள்!!
மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளால் களைக்கொல்லி
மற்றும் உரம் இடும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை இதுவரையிலும்
குறைவாகவே பெய்துள்ளதால் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு
செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்
கிராமங்களிலும் மூவிதழ் அடங்கல் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள்
சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள்,
வணிக வங்கிகளில் ஒரு ஏக்கருக்குரிய பிரீமியத் தொகையான ரூ.332ஐ செலுத்தி காப்பீடு செய்யலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காப்பீடு செய்ய
விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாக மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு
வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக சேமிப்பு கணக்கு
தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால்
காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வருகிற 30–ந்தேதியாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், மாவட்டத்தில் பதிவு
செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் காப்பீட்டு நிறுவனத்திற்கு 30–ந்தேதிக்குள் அனுப்பப்பட வேண்டியுள்ளதால் விவசாயிகள் கிராம நிர்வாக
அலுவலரிடமிருந்து அடங்கல் சான்றினை பெற்று காப்பீடு செய்யும் பணியினை வருகிற 25–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்ட இ-சேவை மையங்களின் ஆப்பரேட்டர்களுக்கான பயிற்சி முகாம்!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட
கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படும்
காவல்துறை சார்ந்த சேவைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களின்
ஆப்பரேட்டர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை எளிதில் பெற்று பயன்பெற ஏதுவாகவும், பொதுமக்களின்; அலைச்சல்களை குறைத்து சிரமமின்றி விண்ணப்பித்திடும் விதமாகவும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 313 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இச்சேவை மையங்களில் பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுதல், பெண்களின்
திருமணத்திற்கு விலையில்லா தங்கம் மற்றும் உதவித்தொகை பெறுதல் உள்பட பல்வேறு
திட்டங்களின் கீழ் எளிதில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இத்தகைய இ-சேவை மையங்களின் மூலம் காவல்துறை சார்ந்த பல்வேறு சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பபம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்றவை தொலைந்து போனால் இ-சேவை மையங்களின் மூலமாக புகார் பதிவு செய்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய புதிய சேவைகள் இணையதளத்தில் எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் என்பது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களின்
ஆப்பரேட்டர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணு
சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். காவல்துறை
சார் ஆய்வாளர் ராதா, தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர்
பயிற்சி வழங்கினார்கள். பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை மின்
மாவட்ட மேலாளர் பிரியதர்ஷன் செய்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)