Monday, October 30, 2017
ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகளை அமைச்சர் துவங்கி வைத்தார்!!
ராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தில் கலெக்டர்
முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்
எம்.மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட
இருக்கும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி
திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனிஅலுவலர்
முனைவர்.என்.ராமபிரான் ரஞ்சித்சிங் உடனிருந்தார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
பேசியதாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு
சட்டக்கல்லூரி அமைவதற்கு ராமநாதபுரம் மக்களின் சார்பாகவும், ராமநாதபுரம்
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழக முதலமைச்சருக்கு நான் விடுத்த
கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் கடந்த 25.05.2017 அன்று
ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு அரசானையினை வெளியிட்டார்கள்.
அந்த அரசாணையின்படி 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும்,3
ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும்
இந்த கல்வி ஆண்டிலேயே வகுப்புகள் தொடங்குவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அரசு
சட்டக்கல்லூரியினை இக்கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கு ஏதுவாக ஆரம்பக் கட்டப்பணிகள், கல்வி
தளவாடப்பொருட்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லா பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றினை
கவனித்திடும் பொருட்டு தமிழக அரசினால் ரூபாய் 2 கோடியே 26 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கென்று நிரந்தர இடம் அமையும் வரை, பெருங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடத்துவதற்கு ஏதுவாக பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தில் நாளை முதல் வகுப்புகள் நடைபெறும். மேலும் இக்கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் 73 மாணவ மாணவியர்களும், 3 ஆண்டு சட்டப்படிப்பில் 16 மாணவர்களும் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தரமாக சட்டக்கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை என் சார்பாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து உரிய இடத்தினை தேர்வுசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உரிய இடம் தேர்வு செய்யப்படும் வரை இந்தக்கட்டிடத்திலேயே சட்டக்கல்லூரி செயல்படும்.
மேலும் இக்கட்டிடத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை, 2 பேராசிரியர்கள் அறை, நூலகம்,மாதிரி நீதிமன்றம், 6 வகுப்பறை,சிறு கலையரங்கம் மற்றும் போதிய கழிவறை வசதியுடன் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு போதன வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக இரண்டு முழு நேரப் பேராசிரியர்களும் மற்றும் 8 கௌரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடத்திட ஏதுவாக உதவியாளர், 2 இளநிலை உதவியாளர்,2 தட்டச்சர்கள்,3 பதிவுறு எழுத்தர் மற்றும் 2 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட
அம்மா பேரசை துணை செயலாளர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஊராட்சிகளின்
உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், ராமநாதபுரம்
வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர்
கலந்து கொண்டனர்.
செய்தி: திரு. தாஹீர்,
கீழை(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஏர்வாடி பெரிய கன்மாவை தூர் வார கோரிக்கை!!
ஏர்வாடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் உள்ள பெரிய கண்மாயை மழைநீரை தேக்க உடனே தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடியில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மற்றும் அதில் உள்ள கிணற்றால் ஏர்வாடி, தொத்தன்மாவடி, வெட்டமனை, அடஞ்சேரி, சின்னஏர்வாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேக்க முடியாத நிலையில், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தேவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அதேபோல் இந்த கண்மாயில் உள்ள கிணறு 1936ம் வருடம் தோண்டப்பட்டு இன்று வரை வற்றாத கிணறாக உள்ளது. இந்த கிணற்றில்
தண்ணீர் சுத்தம் செய்யாமல் உள்ளதால், யாரும் பயன்
படுத்துவதில்லை. ஆகவே இந்த கிணற்றையும் தூர்வாரினால் 20க்கும்
மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
பாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள் , சுற்றுலா வேன் கவிழ்ந்து பலர் படுகாயம்!!
திருப்பூரில் இருந்து சகாதேவன் என்பவர் தனது குடும்பத்தை
சேர்ந்த 15
பேருடன் ஒரு சுற்றுலா வேனில் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி
தரிசனம் செய்ய வந்தார். இவர்கள் நேற்று அதிகாலை 6 மணி அளவில் பாம்பன்
ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகத்தடை அருகே நிலைதடுமாறி
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி பாலத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது.
இதையறிந்த அக்கம் பக்கத்தினரும், போலீசாரும்
அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜ்குமார்
என்பவருக்கு கால் முறிந்தது. இதேபோல ரஞ்சித் (வயது 30) என்பவருக்கு
கை முறிந்தது. மேலும் வேனில் இருந்த சகாதேவன் (45), மணிமேகலை(50), சந்திரமுகி(40)
ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனே காயமடைந்த அனைவரும்
ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 5 பேரும்
மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து ஏற்பட அதிக உயரம் கொண்ட வேகத்தடையும், தடுப்புமே
காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முன்பு பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான
சாலையால் அதிக விபத்துகள் நடந்ததாகவும், தற்போது இந்த தடுப்பாலும், உயரமான
வேகத்தடையாலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதுடன், விபத்துகள்
நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)