முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 7, 2017

ஊரணியை தூர்வாரிய இளைஞர் பட்டாளம்!!

No comments :


ஊரணியில் படர்ந்திருந்த அல்லி, தாமரை செடிகளை இளைஞர்கள் அகற்றி துார் வாரினர்.

திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு ஊராட்சி பெரிய ஊரணியில் தாமரை, அல்லிச்செடிகளின் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி ஏற்பட்டது.

3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணாங்குண்டு பெரிய ஊரணியில் நேற்று காலை 8 மணிக்கு 90 இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். கைகளில் முள்ளு கரண்டி, மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் சகிதம் துப்புறவுப்பணியில் ஈடுபட்டு, ஊரணியை ஆக்கிரமித்திருந்த தாமரை, அல்லிச்செடிகளை குழுக்களாக சென்று அகற்றினர்.



இளைஞர் சங்க தலைவர் அர்ஷத் அலி, 23, கூறுகையில்,

எங்கள் இளைஞர் சங்கத்தில் 120 பேர் உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் படித்து வருகிறோம். விடுமுறை நாட்களில் ஒன்று கூடி பொது விஷயங்கள் குறித்து விவாதித்தும், அதற்கு தீர்வு காண்பதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். தற்போது கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்ட நிலையில் குளிப்பதற்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஊரணியை துார் வாரி செடி, கொடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பல முறை ஊராட்சி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டோம். இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லாததால், இளைஞர்களாகிய நாங்களே களம் இறங்கி துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை மூன்று முறை இவ்வாறு அகற்றினாலும், மீண்டும், தாமரை, அல்லி செடிகள் வளர்வது மட்டும் நிற்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் முழுமையாக அகற்றி ஊரணியை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இருக்கைளுக்கு கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தாலுகா அலுவலகத்தில் இருக்கைகள் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் வண்டிகார தெருவில் தலைமை தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உச்சிப்புளி, மண்டபம், தேவிபட்டிணம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் தினந்தோறும் பல்வேறு சான்றிதழ் வாங்குவதற்காக அங்கு வருகின்றனர்.



இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் தினந்தோறும் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தின் முன்பு உள்ள வெளி வளாகத்தில் அமர்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)