முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 6, 2017

மூன்று வாரங்களாக பூட்டியிருக்கும் கீழக்கரை “அம்மா” மருந்தகம்!!

No comments :
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அம்மா மருந்தகம் கடந்த மூன்று வாரங்களாக பூட்டியிருப்பதால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.

கீழக்கரை நகராட்சியில் 55 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி நகராட்சிகளில் 15 சதவீதம் தள்ளுபடியில் ஏழை மக்கள் பயனடையும் வகையில், 'அம்மா மருந்தகங்களை கடந்த 2014 அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் உள்ள ராம்கோ நிறுவனத்தால் மருந்து, மாத்திரைகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

கீழக்கரையில் உள்ள அம்மா மருந்தகத்தில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது.

ஒரு பொறுப்பாளர், ஒரு பெண் பணியாளர் உள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக மருந்தகம் பூட்டியே கிடப்பதால் மருந்துகள் வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.


அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மருந்தகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதியாக குறைந்த காவிரி குடிநீர் வினியோகம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி குடிநீர் வினியோகம் பாதியாக குறைந்ததால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மக்களின் தாகம் தீர்க்க 'ராமநாதபுரம் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம்' என்ற பெயரில் காவிரி குடிநீர் திட்டம் 2009 ஜூலை 15ல் 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் உள்பட அனைத்து கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.




திருச்சி அருகே முத்தரசநல்லுாரில் காவிரி ஆற்றில் நீரேற்றும் நிலையம் அமைத்து தினமும் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மட்டும் 480 லட்சம் லிட்டர் பம்பிங் செய்யப்படுகிறது. மீதம் திருப்பத்துார், சிவகங்கை பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வறட்சியாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததாலும் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் பம்ப்பிங் செய்யப்படும் பகுதி காவிரி ஆற்றின் கடை கோடியில் உள்ளது.

இதனால், மற்ற மாவட்ட குடிநீர் திட்டங்களுக்கு போக குறைவான நீரே வந்து சேர்கிறது. தற்போது, 480 லட்சம் லிட்டருக்கு பதில் 230 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இதுவும் கிடைக்காது. எனவே, மாவட்ட மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் செல்லத்துரையிடம் கேட்டபோது, தற்போது பாதியளவு நீர்தான் பம்பிங் செய்யப்படுகிறது. இதனால், மாவட்டத்தை இரண்டு பகுதியாக பிரித்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி வருகிறோம். குடிநீரை மக்கள் வீணடிக்க கூடாது.


இதே நிலை நீடித்தால், காவிரி குடிநீரை மட்டுமே நம்பியுள்ள 300 கிராம மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இங்கு மாற்று குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்த வழியில்லை. டேங்கர் மூலம் மட்டுமே குடிநீர் வழங்க முடியும், என்றார்.

செய்தி: திரு. ஷேக், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)