Thursday, March 2, 2017
ராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், 12 மாணவர்கள் கைது!!
ராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு
தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியதாக 12 பேர் புதன்கிழமை கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பனைக்குளம் பகுதியில் கிருஷ்ணாபுரம் உள்பட மாவட்டத்தில் 12 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்
கிருஷ்ணாபுரம் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அதை
எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர் திருமுருகன் தலைமையில் பல்வேறு
கல்லூரிகளைச் சேர்ந்த 12
மாணவர்கள் திடீரென தேவிப்பட்டிணம் பேருந்து நிலையம் முன்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ்.சர்வேஷ்ராஜ் தலைமையில்
தேவிப்பட்டிணம் காவல் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று 12 பேரையும் கைது செய்தனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் மார்ச் 4 ஆம் தேதி முதல் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!
ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையின் சார்பில் முதல் முதலாக
காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மார்ச் 4 ஆம் தேதி முதல்
நடத்த உள்ளதாக எஸ்.பி. ந.மணிவண்ணன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் குற்றம் மற்றும்
குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் முறையினை புதன்கிழமை தொடக்கி வைத்த பின்
மேலும் அவர் கூறியது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில்
ஆள்கள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
பலரும் தேர்வாக வேண்டும் என்ற நோக்கில் மாவட்டக் காவல்துறையின் சார்பிலேயே இலவச
பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறோம். வரும் மார்ச் 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு
சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோரை தேர்வு
செய்ய உள்ளோம்.
இப்பயிற்சியின் போது நீளம் தாண்டுதல், கயிறு
ஏறுதல், மார்பளவை விரிக்கும்போது எவ்வாறு விரித்துக் காட்டுவது போன்ற பயிற்சிகளும்
அளிக்கப்படும். மேலும் மாதிரி எழுத்துத் தேர்வும் நடத்தி மதிப்பெண்கள்
கொடுக்கப்பட்டு அதற்கும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது கையேடுகளும்
இலவசமாக வழங்கப்படவுள்ளன. எனவே இந்த வாய்ப்பை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு 310 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு அதை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தலைக்கவசம் அவசியம் அணிய வலியுறுத்தல், விபத்து அடிக்கடி நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்து அவ்விடங்களில் மேலும் விபத்துக்கள் நடக்காமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதற்கென ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளது. விபத்துக்களை குறைக்க பொதுமக்களும் எஸ்.பி.க்கு நேரில் கடிதம், வரைபடங்கள் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இணையம் வாயிலாகவே கண்டறிந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும். இவை தவிர கைது உத்தரவுகள், பிணை முறி ஆவணங்கள், குற்ற இறுதி அறிக்கைகள் உள்பட அனைத்து ஆவணங்களும் இணையத்தின் மூலமாகவே பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ்.சர்வேஷ்ராஜ் உடன் இருந்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15, 394 மாணவ,மாணவியர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 தேர்வு
மையங்களில் வியாழக்கிழமை முதல் 15, 394 மாணவ,மாணவியர்கள்
பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு எழுத
இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: தமிழகம் முழுவதும்
பிளஸ்-2 பொதுத்தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31 நடைபெறுகிறது.
ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில், பரமக்குடி கல்வி
மாவட்டத்தில் 3,170
ஆண்கள், 4,236 பெண்கள் உட்பட 6,463 பேரும்,
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 4,236 ஆண்கள்,
5,235 பெண்கள் உட்பட 9,471 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
வருவாய் மாவட்ட அளவில் 45 தேர்வு மையங்களில் 7356 ஆண்கள்,8578 பெண்கள் உட்பட மொத்தம் 15, 934 பேர் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.
இவர்களில் 13 மாற்றுத்திறனாளிகளும்
தேர்வு எழுத ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 20 மாணவர்களுக்கு ஒரு அறை
கண்காணிப்பாளரும்,10
தேர்வு அறைகளுக்கு ஒரு நிற்கும் படையும் கண்காணிப்பில்
ஈடுபடுவர்.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், தேர்வு மையங்களை ஆய்வு செய்யவும் வருவாய் மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் 45 தேர்வு மையங்களையும் 6 மண்டலங்களாகப் பிரித்து 6 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)