முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 12, 2017

முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர் தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார். இவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இருவர், தங்களை வங்கி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள், அவரது ஏ.டி.எம். கார்டுக்குரிய நாள்கள் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதை புதுப்பிக்க அதன் எண்ணைத் தெரிவிக்குமாறும் கூறினர். 

.

இதை நம்பிய அவர் அந்த எண்ணைத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது கணக்கில் இருந்த ரூ.1,70,285 இணையம் மூலமாக திருடப்பட்டது

இதுகுறித்து தெரியவந்ததும் கடலாடி காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். அப்புகாரில் 7255807163 என்ற செல்லிடப்பேசி எண்ணிலிருந்து தான் வங்கி ஊழியர்கள் பேசியது போல அந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எண்ணைக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்பு - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் பெரியகண்மாய் உள்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் கூறியது:

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து 1,55,305 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியம் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் பருவமழை பெய்யாததால் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1,26,049 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.

வறட்சியினால் ஏற்பட்டுள்ள பயிர்ப் பாதிப்புகளை மத்தியக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். விவசாயிகளுக்கு உரிய பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாவட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக அடிப்படை மகசூல் அளவுக் கணக்கீடு செய்வதற்காக புள்ளியியல் துறையின் மூலம் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இவ்விடங்களில் பயிர் அறுவடை பரிசோதனைகள் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நெல் மற்றும் பயிர் வகைகளில் மொத்தம் 1,796 எண்ணிக்கையிலான பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் இதுவரை 1,736 பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு செல்லிடப்பேசி மற்றும் இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டபடி பயிர் அறுவடைப் பரிசோதனைகள் அனைத்தும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

அப்போது, வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் டாக்டர்கள், மருந்தாளுநர்களை நியமிக்கவும் ஆன்லைன் கம்ப்யூட்டர் பதிவையும் துரிதப்படுத்தவும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சக்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு என தனியாக நோட்டுகள் பதிவு செய்யப்பட்டு அதில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதனை செய்து மீண்டும் மருந்து, மாத்திரைகள் வழங்க பரிந்துரை செய்வர்.

நாளுக்குநாள் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்களும்மாத்திரைகள் வழங்கும் மருந்தாளுநர்களும் சிரமப்படுகின்றனர். மருந்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதிக்காமலேயே மருந்துமாத்திரைகளுக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது.
மருந்தாளுநர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் மூலம் தற்போது பணியாற்றும் மருந்தாளுநர்களையும் அரசு குறைத்து வருகிறது. இதனால் மேலும் நோயாளிகள் அவதிப்பட நேரும். தற்போது நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவது முதல் மருந்துமாத்திரைகள்ஊசி வழங்குவது வரை ஆன்லைனில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதால் அதற்கு காலதாமதம் ஆகிறது.




அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் ராமநாதபுரம் உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய டாக்டர்கள், மருந்தாளுநர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைக்கு சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். அதற்கேற்ப டாக்டர்கள் மருத்துவமனையில் பணியில் கிடையாது. ஒருசிலர் விடுமுறை எடுத்துச்சென்று விடுவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடும் மருத்துவமனை நிர்வாகம் செய்வது இல்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமம் அடைகின்றனர். நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் டாக்டர்களை அரசு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் சமுதாய கழிப்பிட கட்டிடம்!!

No comments :
ராமநாதபுரம் தாயுமானசாமி கோவில் தெருவில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் சமுதாய கழிப்பிட கட்டிடம் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி பகுதிகளில் தொற்றுநோயை தடுக்கும் விதமாக திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக நகரில் சுகாதார வளாகங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இருப்பினும் அவைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் தாயுமானசாமி கோவில் தெருவில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் ரூ.20 லட்சம் செலவில் சமுதாய கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டது.

கடந்த ஒரு வருட காலமாக இந்த கட்டிடம் திறப்புவிழா காணாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை. நகர் பகுதியில் ஒருசிலர் வீடுகளில் கழிவறை வைத்திருந்தாலும் பலர் திறந்த வெளியையே கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

திறப்புவிழா காணாமல் இந்த கட்டிடம் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்த வருகின்றனர்.  விரைவில் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவ்சர்கள் கூறுகையில், ‘தற்போது புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டி வருகின்றனர். குடிசைகளில் வசிப்போர் பலர் இதுபோன்ற பொது கழிப்பறையையே நம்பியுள்ளோம். புதிய கழிப்பறை திறப்புவிழா காணாமல் உள்ளதால் யாருக்கும் பயன் இல்லை.  இதனால் பலரும் திறந்த வெளியை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பயன் இல்லாமல் உள்ளதுஎன்றார்.


அதிகாரிகள் கவனிப்பார்களா?

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)