Monday, January 16, 2017
ராமநாதபுரம் அருகே தடையை மீறி எருதுகட்டு!!
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் தடையை மீறி
ஞாயிற்றுக்கிழமை நடந்த எருதுகட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் சிலை எடுத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் எருதுகட்டு விழா மாட்டுப்பொங்கலன்று நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடை காரணமாக எருதுகட்டு
விழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் திருமுருகன் தலைமையில் எருதுகட்டு நடைபெற்றது. வழக்குரைஞர் டேவிட், பத்மனாபன், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கயிற்றின் ஒரு முனையை மாட்டின் கழுத்தில் கட்டி மற்றொரு
முனையை மாட்டின் உரிமையாளர் பிடித்துக் கொள்ளும் வகையிலான எருதுகட்டு நிகழ்ச்சி
நடந்தது.
இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். நிகழ்ச்சி நடைபெற்றது காவல்துறைக்கு தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமேசுவரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா!!
ராமேசுவரம் தமிழ்நாடு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை
சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ராமேசுவரம் தமிழ்நாடு ஹோட்டலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு கிராமிய கலைஞர்களின் இசைக்கேற்ப நடனமாடினர்.
பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தனர். விழாவில் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விழாவில் சுற்றுலாத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், நகர்மன்ற முன்னாள் தலைவர் அர்ச்சுணன், நீர்விளையாட்டுக் குழும அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஜர் பெர்ணாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)