முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 2, 2017

ராமநாதபுரத்தில் "இன்வெர்ட்டர்' பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!!

No comments :

ராமநாதபுரத்தில் இன்வெர்ட்டர் மற்றும் யு.பி.எஸ். தயாரிப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள வண்டிக்காரத் தெருவில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கிராமப்புற இளைஞர்களுக்கு இன்வெர்ட்டர் மற்றும் யு.பி.எஸ். தயாரிப்பு பயிற்சி நடைபெற்றது.


இதையடுத்து பயிற்சி மையத்தில் நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை மேலாளர் ஏ.குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ்பாபு, உதவி மேலாளர் எஸ்.சதீஷ்குமார், நிதி ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் வரவேற்றார்.

பயிற்சி ஆசிரியர்கள் என்.சங்கரலிங்கம், பாலாஜி ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்துப் பேசினர். பயிற்சி பெற்ற 26 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே 8½ கிலோ தங்கக்கட்டிகளுடன் வாலிபர் கைது!!

No comments :

ரூ.கோடி மதிப்புள்ள கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த வாலிபரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து உச்சிப்புளிக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீஸ் படையினர் உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.கோடி மதிப்புள்ள 8 கிலோ 700 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து அதனை போலீசார் கைப்பற்றி அந்த காரில் வந்த என்மனங்கொண்டானை சேர்ந்த முஜிபுர் ரகுமான்(வயது 31) என்பவரை கைது செய்தனர். இவர் உச்சிப்புளியில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஏற்கனவே இவர் மீது கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வாலிபரை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்டு ஒரு ஏஜெண்டு மூலம் தன்னிடம் கொடுக்கப்பட்டதாகவும், இந்த தங்க கட்டிகளை சென்னையில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தங்க கட்டிகளை ராமநாதபுரத்தில் உள்ள வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் ஆய்வு செய்து அவை உண்மையான தங்கம் தான் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளும் அதனை கடத்தி வர பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து மேல் விசாரணைக்காக முஜிபுர் ரகுமானை மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த தங்கம் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் மதுரை மத்திய புலனாய்வு பிரிவு தனி கோர்ட்டில் முஜிபுர் ரகுமானை ஆஜர்படுத்த உள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)