(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 24, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் பனைமர விதைகளை நடும் பணிகளை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்!!

No comments :
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் கண்மாய் கரையினை பலப்படுத்தும் விதமாக பனைமர விதைகளை நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கண்மாய்கள், ஊருணிகள் ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும் விதமாக நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்களை வளர்த்து இயற்கை அரணாக பாதுகாக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடத்தில் இருந்து வந்தது.

அதனை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பினை தடுத்து பலப்படுத்தும் விதமாக, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் நீர்நிலைகளின் கரைகளில் பனை விதைகளை விதைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் மொத்தம் 640 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களின் கரைகளை பலப்படுத்தும் வகையில் மொத்தம் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2016–ம் நிதியாண்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் உள்ள கண்மாய்களில், 33 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு கண்மாய்கள் பழுது பார்த்து, புனரமைத்து தரப்படுத்தும் திட்டத்தில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. முதல்கட்டமாக இந்த கண்மாய்களில் 10,000 பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன.

தேசிய ஊரக வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களைக்கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் விரைவில் விரிவுபடுத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் செயல்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் தாமஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment