Tuesday, June 27, 2017
கலெக்டர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர்
நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட
வருவாய் அலுவலர் முத்துமாரி, வேளாண்மை துறை இணை இயக்குனர் அரிவாசன், கால்நடை
பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மோகன், கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் முருகேசன்,
நபார்டு திட்ட பொது மேலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை
சார்ந்த தோழமை துறைகளின் மூலம் பல்வேறு வேளாண் மேம்பாட்டு திட்டப்பணிகள்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2016–17–ம் நிதியாண்டில் பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல்
மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 542
விவசாயிகளுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 981
எக்டேர் பரப்புக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
மிளகாய் போன்ற தோட்டக்கலை விவசாயிகளுக்கு 10,044 விவசாயிகளுக்கு 8,220 எக்டேர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. 2016–17–ம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடன் பெற்ற
விவசாயிகளுக்கு ரூ.1
கோடியே 65 லட்சமும், கடன் பெறாத
விவசாயிகளுக்கு ரூ.353
கோடியே 63 லட்சமும் முதல் தவணையாக ஒதுக்கீடு
செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை மூலமாக நீடித்த நிலையான மானாவாரி
வேளாண்மை திட்டம் நடப்பு ஆண்டில் 5,000 எக்டேரில் முதல்
கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு தொகுப்புக்கு 1000 எக்டேர்
என்ற அடிப்படையில் 5
தொகுப்புகள் நடப்பு ஆண்டில் 5 வட்டாரங்களில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி
உற்பத்தியை நீடித்த நிலையான வகையில் பெருக்கி விவசாயிகளின் வருமானம் மற்றும்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுஉள்ளது.
இதில் மொத்தம் 53 ஊருணிகள் தேர்வு
செய்யப்பட்டு இதுவரையில் 20
ஊருணிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர குடிமராமத்து திட்டப்பணிகள் குண்டாறு
வடிநிலக்கோட்டத்தில் 14
கண்மாய்களில் முடிவு பெற்றுள்ளன. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்
வட்டாரங்களில் 5
கண்மாய்களில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளின்
நலனையும் பாதுகாக்கிற வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment