(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 5, 2017

பதிவு சான்றிதழ் பெறாத உணவுபொருட்கள் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுபொருட்கள் வியாபாரிகள் உடனடியாக பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாவிட்டால் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் அமலில் உள்ளது. பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை தற்போது புதிய சட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை வழங்குகிறது. ஏற்கனவே உணவுபொருட்கள் வியாபாரிகளுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதால் வியாபாரிகள் அவர்களுடைய விற்பனை கொள்முதல் தொகைக்கு ஏற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதன்படி உரிமம் அல்லது பதிவு பெற வேண்டிய உணவு உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் வினியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனைவரும் தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு அல்லது உரிமம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.


வருடத்திற்கு ரூ.12 லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். வருடத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்பவர்களுக்கு உரிமக்கட்டணமாக சில்லறை விற்பனையாளருக்கு ஆண்டுக்கு ரூ.2,000–மும், தயாரிப்பாளர்கள் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டதாக இருந்தால் ரூ.3,000–மும், ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேல் இருந்தால் ரூ.5,000–மும் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி தங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகல் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அனைத்து உணவு வியாபாரிகளும் பதிவு சான்று அல்லது உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு புதுப்பித்துக் கொள்ளும்பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிமம் எண் பெறுவதோடு அபராதத்தொகையையும் தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,000 உணவு வணிகர்களுக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டில் உணவுப்பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு 399 உரிமமும், 3,806 பதிவு சான்றிதழும் ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரையிலும் கலப்பட உணவுப்பொருட்கள் அதாவது பாதுகாப்பற்ற, தரக்குறைவான உணவுப்பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 45 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனையும் அபராதத்தொகையும் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. மேலும், ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுஉள்ளது. பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர்களும்,

மாணவமாணவிகளும் தங்களது உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் எண் 94440 42322–ல் தெரிவிக்கலாம். 

அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படும். மாவட்டத்தில் உணவுபொருட்கள் வியாபாரிகள் உடனடியாக பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெறாவிட்டால் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment