(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 31, 2017

GSTக்கு எதிர்ப்பு : ராமநாதபுர மாவட்ட ஓட்டல்கள், மருந்துகடைகள் முழுஅடைப்பு, சுற்றுலா பயணிகள் அவதி!!

No comments :

மத்திய அரசு ஓட்டல்களுக்கான சரக்கு சேவை வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புதிய சேவை வரியால் உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளின் விலைவாசி கடுமையாக உயரும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சேவை வரி உயர்வினை ரத்து செய்யக்கோரி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு செய்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்புராம், நகர் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பு ஆகியோர் கூறியதாவது:

புதிய சேவை வரி உயர்வினால் உணவு பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இந்த வரி உயர்வு என்பது முழுமையாக மக்களின் மேல் சுமத்துவதாகும்.

அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கும் பொதுமக்களின் நலனுக்காக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. மக்களின் நலன்கருதி புதிய சேவை வரி உயர்வினை அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்காக ராமநாதபுரத்தில் 162 ஓட்டல், பேக்கரிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 780 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அவர் கூறினர்.



இதேபோல, மத்திய அரசு மருந்து விற்பனையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி வழங்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் ஒருநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தினை அனுமதிக்காமல் தடைவிதிக்க வலியுறுத்தி அனைத்து மருந்துகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குப்தா கோவிந்தராஜ் கூறியதாவது:மனிதனின் உயிர்காக்கும் மருந்து விற்பனை என்பது சம்பந்தப்பட்ட டாக்டரின் பரிந்துரையின்படி மருந்தாளுனர் மேற்பார்வையில் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் என்று வந்துவிட்டால் குளிர்பதன நிலையில் இருந்து எடுத்து பார்சலில் வரும் காலநேரத்தில் அந்த மருந்தின் வீரியம் குறைந்து மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மருந்துகடைகள்

மேலும், மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வினியோகம் செய்ய கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தில் இந்த நிலை மாறி யார் வேண்டுமானாலும் எந்த மருந்தையும், எவ்வளவு அளவும் வாங்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். இது மனிதனின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்திவிடும். சில மருந்துகள் அதிகமாக பயன்படுத்தும்போது போதை ஏற்படுத்திவிடும். இந்த மருந்துகளை இளைஞர்கள் ஆன்லைனில் பெற்று வழிதவறி செல்ல வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

மருந்து வணிகர்கள் முறையாக வரி செலுத்தி மருந்துகள் விற்பனை செய்வதால் அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். எனவே, ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடைவிதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் 640 மருந்துகடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment