(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 7, 2017

சொந்த நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாவிடில் கடும் நடவடிக்கை - கலெக்டர்!!

No comments :
சொந்த நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப் படை, தானம் அறக்கட்டளை ஆகியன இணைந்து சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியை ராமநாதபுரத்தில் நடத்தினர்.
ராஜா தினகர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியை ஆட்சியர் தொடக்கி வைத்து பேசியது: உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 35.30 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் இடங்களில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றியிருக்கிறோம்.

இப்பணியை தொடர்ந்து முழுவீச்சில் நடந்து வருகிறது. பல்வேறு துறைகள் மூலமாக 203 இயந்திரங்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் 14 கண்மாய்களில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களும் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 5373 ஏக்கர் பரப்பளவு அகற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் அரசு சார்பில் வெட்டப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து செலவுத்தொகையினை இருமடங்காக வசூல் செய்யப்படும்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவிப்புகள்,துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் நோட்டீஸ் மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தனியார் நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு போதிய கால அவகாசம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை அகற்றும் பணிகளை அதிகாரிகளும் விரைந்து செய்திட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், ஏ.எஸ்.பி. எஸ்.சர்வேஷ்ராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துச்சாமி, செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் பாபு அப்துல்லா, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment